சும்மா கிளப்பிவிடாதீங்க.! ரகசிய உறவுக்கு அவசியமே இல்லை- டென்சனான ஸ்டாலின்
கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பாஜக தலைவர்கள் பங்கேற்றது அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக-பாஜக இடையே ரகசிய உறவு இல்லை என முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். ராஜ்நாத் சிங்கை அழைத்து நிகழ்ச்சி நடத்தியதால் திமுக, பாஜகவுடன் ரகசிய உறவு வைத்திருக்கிறது என்ற செய்தி தவறானது எனவும் அவர் மறுத்துள்ளார்.
தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து வரும் நிலையில் கடந்த ஒரு சில வாரங்களாக பாஜகவுடன் திமுக நட்பு பாராட்டி வருவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் திமுக தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழா அரசு விழாவா.? அல்லது திமுக- பாஜக இணைந்து நடத்தும் விழாவா என கேள்வி எழுப்பும் வகையில் இரண்டு கட்சி நிர்வாகிகளும் ஒன்று கூடி விழாவை நடத்தியுள்ளனர். இந்த விழாவிற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையேற்றிருந்தார்.
பிரதமர் மோடி கருணாநிதியின் சேவைகளை புகழ்ந்து வாழ்த்து செய்தி வெளியிட்டிருந்தார். முதலமைச்சர் ஸ்டாலினோடு பிரதமருக்கு நன்றி தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிகழ்ச்சிக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்ற அண்ணாமலையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மட்டுமில்லாமல் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார்.
இதன் காரணமாக தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படுவதாக பேச்சு அடிப்பட்டது. குறிப்பாக மத்தியில் பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் மோடி திமுகவிற்கு வலை வீசுவதாக கூறப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக- பாஜக இடையே ரகசிய உறவு இருப்பதாக தெரிவித்தார். இந்தநிலையில் இந்த பேச்சுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
திருவொற்றியூர் முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமியும், தற்போதைய திமுக எம்எல்ஏ கே.பி.சங்கரின் இல்லத்திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது பேசிய அவர், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் நேற்று வெளியிடப்பட்டது. கலைஞரின் நினைவிடத்தை பார்க்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கே நேரில் சென்று பார்வையிட்டார். திமுகவினர் பேசுவதை விட, சிறப்பாக ராஜ்நாத் சிங் கலைஞர் கருணாநிதி தொடர்பாக அதிகமாக பேசினார். தனது உள்ளத்தில் இருந்தை பேசினார் ராஜ்நாத் சிங்.
ராஜ்நாத்சிங் கலைஞரை பற்றி பேசியதை சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என தெரிவித்த ஸ்டாலின், கலைஞர் கருணாநிதிக்கு வெளியிடப்படும் நாணயத்தில் இந்தி உள்ளது என விமர்சிக்கின்றனர். அனைத்து தலைவர்களுக்கும் நாணயம் வெளியிடும்போது இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் என தெரிவித்தார். இது கூட எதிர்கட்சி தலைவருக்கு தெரியவில்லை என கூறினார்.
கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா திமுக நடத்திய நிகழ்ச்சி இல்லை. இது மத்திய அரசின் நிகழ்ச்சி என்பது கூட தெரியாத.? என கேள்வி எழுப்பியவர், இதன் காரணமாகவவே ராகுல் காந்தி பங்கேற்கவில்லையென தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைத்து நாம் நிகழ்ச்சி நடத்தியதால் திமுக, பாஜகவுடன் ரகசிய உறவு வைத்திருக்கிறது என்ற ஒரு செய்தியை பரப்புகிறார்கள்.
இது தொடர்பாக ஒவ்வொருவரும் பல கோணத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எந்தவிதமான ரகசிய உறவும் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லை என குறிப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமியை போல உருண்டு போய், பதுங்கி போய் பதவி வாங்க வேண்டிய தேவை திமுகவிற்கு கிடையாது என முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.