- Home
- Gallery
- திறமைக்கு அங்கீகாரம்... விகடன் விருதுகள் 2023; நடிகர் சித்தார்த்தின் 'சித்தா' 5 விருதுகளை வென்றுள்ளது!
திறமைக்கு அங்கீகாரம்... விகடன் விருதுகள் 2023; நடிகர் சித்தார்த்தின் 'சித்தா' 5 விருதுகளை வென்றுள்ளது!
நடிகர் சித்தார்த், நடித்து தயாரித்திருந்த சித்தா திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இப்படத்திற்கு விகடன் 2023 விருது விழாவில் 5 பிரிவுகளின் கீழ் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டுள்ளது.

chithha
அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு படம் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களால் கெளரவிக்கப்படுவது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியான தருணம். நடிகர் சித்தார்த்தின் 'சித்தா' திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களுக்கு அப்படி பிடித்த படங்களில் ஒன்று. இத்திரைப்படம் பல பாராட்டுகளைப் பெற்றுள்ள நிலையில், மதிப்புமிக்க விகடன் விருதுகளையும் வென்றுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த பாடல் வரிகள் உள்ளிட்ட ஐந்து விருதுகளை இப்படத்திற்கு விகடன் வழங்கி கௌரவித்துள்ளது.
chithha
நடிகர் சித்தார்த் கூறும்போது, “எங்களின் கடின உழைப்பை பத்திரிக்கை மற்றும் ஊடகத் துறையினர் அங்கீகரிப்பதைப் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பத்திரிக்கையாக விகடன் அதன் நம்பகத்தன்மையை நிரூபித்துள்ளது. இதுமட்டுமல்லாது, திரைப்படம் மற்றும் சின்னத்திரை தயாரிப்பிலும் வெற்றிகரமாக பல விஷயங்களை செய்து ரசிகர்களின் மனதை வென்றுள்ளது.
விகடனின் அங்கீகாரமும் அதன் நடுநிலையான விமர்சனமும் பல திரைப்படங்களுக்கு தூணாகவும் முதுகெலும்பாகவும் இருந்து வருகிறது. இவை அனைத்தும் அந்தப் படத்தின் மதிப்பையும் உயர்த்துகிறது. ஒரு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் ‘சித்தா’ திரைப்படம் விகடனில் இருந்து மிகப் பெரிய கவுரவத்தைப் பெறுவதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.
Chithha Movie
மேலும், நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து 'இந்தியன்2' படத்தில் திரையை பகிர்ந்து கொள்வது குறித்து கேள்வி எழுப்பியபோது, "நான் ஒரு நடிகனாக வருவதற்கு முன்னால் உதவி இயக்குநராகதான் என் பயணத்தைத் தொடங்கினேன். கமல்ஹாசன் எனக்கு குருவாகவும், வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார். அவருடன் பணிபுரியும் போது அவரிடம் இருந்து நுணுக்கங்களையும் அவரது பன்முகத்தன்மையையும் கற்றுக்கொண்டது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது.
Indian 2 Second Song
இந்தப் படத்தின் ஒவ்வொரு புரோமோஷனிலும் நானும் இருக்க விரும்பினேன். ஆனால், முந்தைய கமிட்மென்ட் காரணமாக 'இந்தியன் 2' ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போவது எனக்கு வருத்தம்தான். 'இந்தியன்2' திரைப்படம் எனது கரியரில் மிகச்சிறந்த படமாக இருக்கும். இந்த விலைமதிப்பற்ற வாய்ப்பை எனக்கு வழங்கிய லைகா புரொடக்ஷன்ஸ், இயக்குநர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு நன்றி. திரையரங்குகளில் பார்வையாளர்களுடன் சேர்ந்து நானும் படம் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்" என்றார்.