ஏமாற்றத்தில் செந்தில் பாலாஜி- உச்சநீதிமன்றம் என்ன சொன்னது தெரியுமா.?
அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதிமுக டூ திமுக
முன்னாள் முதலமைச்சர் மறைவையடுத்து அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக அதிமுகவில் இருந்து திமுகவிற்கு பல்டி அடித்த செந்தில் பாலாஜி சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து செல்வாக்கு மிக்க மின்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்த சூழ்நிலையில் தான் அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக 2013ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சுமார் 10ஆண்டுகளுக்கு பிறகு செந்தில் பாலஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.
அமலாக்கத்துறை செக்- செந்தில் பாலாஜி கைது
கடந்த ஜூன் மாதம் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி சுமார் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் தவித்து வருகிறார். கீழமை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை பல நீதிமன்றங்களில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பின் காரணமாக ஜாமின் மறுக்கப்பட்டது. உடல் நிலை பாதிப்பு தொடர்பாகவும் பல முறை ஜாமின் கேட்கப்பட்டது. ஆனால் இதனை ஒரு காரணமாக கூறி ஜாமின் கேட்க கூடாது என நீதிமன்றம் கண்டித்தது.
ஜாமின் மனு- உச்சநீதிமன்றம் விசாரணை
இந்தநிலையில் மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா அமர்வில் செந்தில் பாலாஜி ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், வழக்குக்கு சம்பந்தமில்லாத வாதங்களை எல்லாம் அமலாக்கத் துறை முன்வைத்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது. அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழக அரசு மனுதாரர் செந்தில் பாலாஜிக்கு உதவி வருவதாக குற்றம்சாட்டியது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, டெல்லி முன்னாள் அமைச்சர் மணிஷ் சிசோடியா வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள்காட்டி, செந்தில் பாலாஜிக்கும் அதே வகையில் ஜாமீன் வழங்க முடியும்தானே.? என்று கேள்வி எழுப்பினர்.
செந்தில் பாலாஜிக்கு ஜாமின்
இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது. இன்று வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் கூறிய விளக்கங்களை சொலிசிட்டர் ஜெனரல் ஆகஸ்ட் 20ம் தேதி அளிக்க உள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 20ம் தேதி முதல் வழக்காக பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவால் இன்று ஜாமின் கிடைத்து விடும் என எதிர்பார்த்த திமுகவினர் ஏமாற்றம் அடைந்தனர்.