காத்து வாங்கும் சசிகலா சுற்றுப்பயணம்.! கூவி, கூவி அழைத்தாலும் கண்டு கொள்ளாத தொண்டர்கள்
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் ஏற்பட்ட அதிகாரப் போட்டியால் பல பிரிவாக பிரிந்துள்ள நிலையில் சசிகலாவின் தற்போதைய சுற்றுப்பயணம் தொண்டர்கள் மத்தியில் எந்தவித தாக்கமும் ஏற்படுத்தாத நிலையே உள்ளது..
அதிமுக அதிகார மோதல்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட வெற்றிடம் காரணமாக அதிகாரத்தை பிடிப்பதில் பல போட்டிகள் உருவானது. ஆரம்பத்தில் ஓ.பன்னீர் செல்வம்- சசிகலா என இருந்த மோதலால் தர்மயுத்தம் தொடங்கினார் ஓ.பன்னீர் செல்வம். அடுத்த ஒரு சில வாரங்களில் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றிய சசிகலா முதலமைச்சர் பதவியையும் குறிவைத்தார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் வந்த சொத்து குவிப்பு வழக்கால் சிறைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் சசிகலாவிற்கு ஏற்பட்டது.
ஓபிஎஸ்- இபிஎஸ் கூட்டணி
அப்போது முதலமைச்சர் பொறுப்பையும் கட்சியையும் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்துவிட்டு சிறை சென்றார் சசிகலா, இடையில் ஓ.பன்னீர் செல்வத்தின் சட்ட போராட்டத்தால் இரட்டை இலை முடக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் டிடிவி தினகரனும் கைது செய்யப்பட்டார். அடுத்தடுத்து அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தால் தொண்டர்கள் திகைத்து நின்றனர். ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும்- ஓ.பன்னீர் செல்வமும் கூட்டணி அமைத்து மீதமுள்ள ஆட்சியை நடத்தினர்.
சசிகலா சுற்றுப்பயணம்
2021ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியை அதிமுக சந்தித்த நிலையில், ஒற்றை தலைமை குரல் எழுந்தது. இதனை ஏற்றுக்கொள்ளாத ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் தனியாக செயல்பட்டார். கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்தநிலையில் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என கூறிய சசிகலா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த மாதம் தென்காசி மாவட்டத்திலும் இந்த மாதம் நெல்லையிலும் தொண்டர்களை சந்திக்க சென்றார்.
வரவேற்பு இல்லாத சுற்றுப்பயணம்
சசிகலா செல்லும் இடங்களில் தொண்டர்கள் மத்தியில் வரவேற்பு இல்லாத நிலையே நீடித்து வருகிறது. நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மொத்தமாக 5ஆயிரம் பேர் கூட வரவில்லை. மேலும் அதிமுக பொதுச்செயலாளர் தான் எனக்கூறி வரும் சசிகலா ஜாதிக்கட்சி தலைவராகவே தனது சமுதாயத்தை நம்பி சுற்றுப்பயணம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் திமுகவை பெரிய அளவில் நேரடியாக எதிர்க்காமல் தெருவில் உள்ள கால்வாய் பிரச்சனையை மையமாக வைத்து மட்டுமே பேசி வருகிறார்.
அதிரடி அரசியலை கையில் எடுப்பாரா.?
மேலும் அதிமுகவின் தற்போதைய தலைவர்களான எடப்பாடி பழனிசாமியை பற்றி எந்த வித கருத்துகளும் தெரிவிக்காமல் மக்கள் மத்தியில் பேசி வருகிறார். மொத்தத்தில் சசிகலாவின் அதிமுக மீட்கும் பயணம் தொண்டர்கள் மத்தியில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சசிகலா வரும் காலத்தில் அதிரடியாக தனது அரசியல் மேற்கொண்டால் மட்டுமே அதிமுகவின் தலைவர்களை தங்கள் பக்கம் திரும்பி பார்க்க வைக்க முடியும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.