கிளைமேக்ஸை நெருங்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு!!
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் திடுக்கிடும் திருப்பங்கள்! சரணடைந்தவர்களின் வாக்குமூலம், என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட முதல் குற்றவாளி, சிறையில் இருக்கும் நாகேந்திரனின் தொடர்பு என பல அதிரடி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆம்ஸ்ட்ராங் கொலை
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அடுத்த ஒரு சில மணி நேரத்தில் 11 பேர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த ஆண்டு ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டதற்கு பழி வாங்கவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக தெரிவித்தனர். ஆனால் ஆற்காடு சுரேஷ் கொலைக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லையெனவும், ஆம்ஸ்ட்ராங் கொலையில் பின்னனி வேறு யாரோ இருப்பதாக புகார் கூறப்பட்டது.
கொலைக்கு பின்னனியில் யார்.?
இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங்கை முதலில் வெட்டிய குற்றவாளி திருவேங்கடத்தை போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொலை செய்தனர். இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த கொலையாளிகள் கொலைக்கு பின்னனியில் உள்ள நபர்களின் பெயர்களை வெளியே சொல்லத்தொடங்கினர். சிலந்தி வலை போல பல முக்கிய நபர்களின் பெயர்கள் அடிபட்டது. பல்வேறு கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் தான் இந்த கொலைக்கு முக்கிய நபராக ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நாகேந்திரன் பெயர் கூறப்பட்டது.
அஸ்வத்தாமன் கைது- போலீஸ் ரகசிய விசாரணை
தனது மகனும் காங்கிரஸ் கட்சியில் நிர்வாகியாக இருந்த அஸ்வத்தாமனுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் மோதல் இருந்ததாக கூறப்பட்டது. இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 150 கோடி ரூபாய் மதிப்பிலான இடம் தொடர்பாகவும் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து தான் அஸ்வத்தாமனை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். அஸ்வத்தாமனை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். நேற்றும் இன்றும் நடைபெற்ற விசாரணையில், ஆம்ஸ்ட்ராங்கோடு எந்த விவகாரத்தில் மோதல் போக்கு ஏற்பட்டது? எத்தனை ஆண்டுகளாக இரு தரப்புக்கும் முன் விரோதம் இருந்தது? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
நாகேந்திரனிடமும் விசாரணை
மேலும் ரவுடி நாகேந்திரன் சிறையில் இருந்தபடியே ஆம்ஸ்ட்ராங்கை மிரட்டியது உண்மையா? கொலையாளிகளை பணம் மற்றும் ஒருங்கிணைத்தது எப்படி ? என்பன உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே கொலைக்கு முக்கிய பங்கு வகித்த நாகேந்திரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் களம் இறங்கியுள்ளனர். வேலூர் சிறையில் உள்ள நாகேந்திரனை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரிக்க உள்ளனர். இந்த விசாரணையின் போது ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணங்கள் வெளியே வரும் என கூறப்படுகிறது.