கோவிலில் அர்ச்சனை செய்து வீடு தேடி சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. காலை தொட்டு வணங்கிய புஸ்ஸி ஆனந்த்.!
விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் அவரது வீட்டிற்கே சென்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் மாநில பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்த் இருந்து வருகிறார். விஜய்யின் அரசியல் பிரவேசம் தொடர்பாக அவ்வப்போது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். அதுமட்டுமின்றி விஜய் படங்களின் நிகழ்ச்சிகளுக்கான பணிகளையும் கவனித்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் வெளியான லியோ திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதற்காக இரவு பகல் பாராமல் உழைத்த புஸ்ஸி ஆனந்துக்கு 2 நாட்களுக்கு முன்னர் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தகவலறிந்து நடிகர் விஜய் அன்று இரவே பதறிப்போய் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து புஸ்ஸி ஆனந்த் வீடு திரும்பிய நிலையில் அவரை புதுச்சேரி முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது கையோடு புஸ்ஸி ஆனந்த் பெயரில் அர்ச்சனை செய்து பிரசாதம் எடுத்துச் சென்றிருந்த ரங்கசாமி, அதனை புஸ்ஸி ஆனந்திற்கும் அவரது மனைவிக்கும் நெற்றியிலும் வைத்துவிட்டார். அப்போது ரங்கசாமி புஸ்ஸி ஆனந்த் ரங்கசாமியின் காலில் விழுந்து ஆசி பெற்றார். இதனையடுத்து, இருவரும் அரசியல் தொடர்பாக சிறிது நேரம் பேசினர்.