தாழ்வு மண்டலம் கரையை கடந்ததா.? தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருக்கா.? இதோ லேட்டஸ்ட் அப்டேட்
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை ஆந்திரா-ஒரிசா கடற்கரையில் கரையை கடந்த நிலையில், தமிழகத்தில் மழை பெய்யுமா, வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த விரிவான தகவல்கள் உள்ளே.
கரையை கடந்ததா.?
தமிழகத்தில் மழை நிலவரம் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்று காலை மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (01-09-2024) அதிகாலை வடக்கு ஆந்திரா- தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில், கலிங்கப்பட்டினத்திற்கு அருகே கரையை கடந்தது.
தமிழகத்தில் மழை
நாளை (01.09.2024) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 -40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நாளை மறுதினம் (02.09.2024) தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 03.09.2024 முதல் 07.09.2024 வரை: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
01.09.2024 மற்றும் 05.09.2024 வரை: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், வடதமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
01.09.2024: தெற்கு வங்கக்கடல், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
02.09.2024: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.