பழனி முருகன் கோவிலுக்கு போறீங்களா? அப்படி கண்டிப்பா இதை படிச்சிட்டு போங்க.. இன்று முதல் அமலுக்கு வந்தது.!
பழநி முருகன் கோவிலுக்குள் செல்போன், கேமராக்களுக்கு கொண்டு செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Palani
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் வெளியூரில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் செல்போன், கேமரா உள்ளிட்டவைகள் மூலமாக மலைக்கோவிலுக்கு சென்று புகைப்படம் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் கருவறையில் எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மலைக்கோவிலுக்கு செல்போனை எடுத்து செல்ல தடைக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் பழனி கோவிலில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அறநிலையத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, பழனி முருகன் கோவிலுக்குள் இன்று முதல் செல்போன், கேமரா கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் செல்போன் மற்றும் புகைப்படம் எடுக்கும் வீடியோ, சாதனங்களை கோவிலுக்கு கொண்டு வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் மலைக்கோவில் அடிவாரத்தில் மின் இழுவை ரயில் நிலையம், ரோப் கார் ஆகிய பாதுகாப்பு நிலையங்களில் ரூ.5 கட்டணம் செலுத்தி ரசீதை பெற்றுக்கொண்டு பக்தர்கள் செல்போன், கேமிராக்கள் இங்கு வைத்துச் செல்லாலாம். பின் மீண்டும் தரிசனம் முடித்த பின், ரசீதை கொடுத்து செல்போனை பெற்றுக் கொள்ளலாம்.