அமைச்சரின் மகன், மருமகனின் கட்சி பதவி பறிப்புக்கு இது தான் காரணம்.! விரைவில் செஞ்சி மஸ்தானின் பதவியும் காலி?
தன் குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி வழங்கி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதை அடுத்து அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியர் அலி மற்றும் அவரது மருமகன் ரிஸ்வான் ஆகியோரின் கட்சிப் பதவியை திமுக தலைமை பறித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
KS Masthan
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சராக செஞ்சி மஸ்தான் இருந்து வருகிறார். திண்டிவனம், செஞ்சி மற்றும் மயிலம் சட்டமன்றத் தொகுதிகளை உள் அடக்கியது. இவர் அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து பல்வேறு புகார் குவிந்த வண்ணம் இருந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் சகோதரர் நசீரை செஞ்சி நகர திமுக செயலாளர் பொறுப்பிலிருந்து தலைமைக்கழகம் நீக்கியது.
இந்நிலையில் திமுக தலைமைக் கழகத்தில் இருந்து அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக உள்ள மொக்தியார் அலி மஸ்தான், அப்பொறுப்பிலிருந்து விடுவித்து அவருக்குப் பதிலாக செஞ்சி பெரும்புகை கிராமத்தை ரோமியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க;- அமைச்சர் மஸ்தானின் பதவி தப்புமா? ஒரே நேரத்தில் 13 திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா!
அதேபோல் விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளராக உள்ள ரிஸ்வான் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக செஞ்சி அடுத்த பள்ளியம்பட்டு கிராமம் கபூர் சாகிப் தெருவில் வசிக்கும் ஷேக்வாகித் நியமிக்கப்பட்டுள்ளார். பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரிஸ்வான் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஏற்கனவே உள்ள நிர்வாகிகள் புதியதாக நியமிக்கப்பட்ட நிர்வாகியுடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென திமுக தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இவர்கள் பதவி பறிப்புக்கு முக்கிய காரணம் கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது மாற்றுக் கட்சியில் இருந்து வந்தோருக்கு சீட் கொடுத்தது, பெரும்பாலான பொறுப்புகள் தன் குடும்ப உறுப்பினர்களுக்கே வழங்கியது. மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம், கடந்த மாதம் திண்டிவனம் நகராட்சியின் நிர்வாக செயல்பாடுகளைக் கண்டித்து நகர்மன்றக் கூட்டத்திலிருந்து 13 திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா உள்ளிட்ட பல்வேறு புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அமைச்சர் மஸ்தான் மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.