Savukku : சவுக்கு சங்கருக்கு வந்த குட் நியூஸ்.! குண்டர் சட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பெண் காவலர்களை அவதூறாக விமர்சித்த வழக்கில் சவுக்கு சங்கர் மீது தொடர்ப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சவுக்கு சங்கர் சர்ச்சை கருத்து
பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார். மேலும் அரசியல் தலைவர்களை ஒருமையில் விமர்சித்தார். ஒரு கட்டத்தில் பெண் காவலர்களை தவறான வார்த்தைகளால் விமர்சித்து யூடியூப் சேனலில் பேசியிருந்தார். இதனையடுத்து போலீசார் தேனியில் வைத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சவுக்கு சங்கரை கைது செய்தனர். அப்போது அவரது கார் மற்றும் ஓட்டல் அறையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வழக்கிலும் சிறையில் அடைக்கப்பட்டார்.
சவுக்கு சங்கர் மீது தொடரும் வழக்கு பதிவு
இதனை தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள பெண் காவலர்கள் கொடுத்த புகாரின் பேரின் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டார். இதனால் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.இரண்டு வருடங்கள் சிறையில் இருந்து வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சவுக்கு சங்கரின் தாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற போது சவுக்கு சங்கர் குண்டர் சட்டம் தொடர்பாக நீதிபதி சுவாமிநாதன் ஒரு தீர்ப்பும், மற்றொரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பும் அளித்தனர். இதனையடுத்து இந்த வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது. அங்கிருந்து மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது நீதிபதிகள் சவுக்கு சங்கர் பேசியது தொடர்பாக அந்த அந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம். தண்டனை வாங்கி கொடுக்கலாம். குண்டர் சட்டம் தேவையில்லாத்து என கூறியிருந்தனர்.
குண்டர் சட்டம் ரத்து
ஆனால் தமிழக அரசு தரப்பில் நீதிபதி மற்றும் காவல்துறை அதிகாரிகள் தொடர்பாக தொடர்ந்து அவதூறாக விமர்சித்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும் சவுக்கு சங்கரின் பேச்சால் சமூகத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறினர். இதனையடுத்து இன்று குண்டர் சட்டம் தொடர்பாக வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன் படி குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக தெரிவித்த நீதிபதி, வேறு ஏதேனும் வழக்கு நிலுவையில் இல்லையென்றால் உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டனர்.