சிவாஜி, ரஜினிகாந்த், வஹீதா ரஹ்மான் உள்பட.. தாதாசாகேப் பால்கே விருது பெற்ற பிரபலங்களின் விவரம்!!
பிரபல நடிகை வஹீதா ரஹ்மானுக்கு இந்த ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த மிக உயரிய விருதை பெற்ற முக்கிய பிரபலங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
1969 ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வரும் இந்த விருது, இந்திய சினிமாவின் தந்தை, என அழைக்கப்படும் தாதாசாகேப் பால்கேயின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் இந்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் முழு நீள திரைப்படமான ராஜா ஹரிச்சந்திரா திரைப்படத்தை, 1913-ஆம் ஆண்டு இயக்கி தயாரித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் திரையுலகினரும் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படும் தாதாசாகேப் பால்கே விருது, இந்த ஆண்டு நடிகை வஹீதா ரஹ்மானுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் தொடர்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இதை தொடர்ந்து இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சரி 1969 ஆம் ஆண்டில் இருந்து 2023 வரை... 69 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் இந்த விருதை பெற்ற, குறிப்பிட்ட பிரபலங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
தேவிகா ராணி:
இந்த விருதை முதல் முதலில் பெற்றவர் ஹிந்தி பட நடிகை, தேவிகா ராணி சவுத்திரி. இவர் தான் இந்திய திரையுலகில் அறிமுகமான முதல் நடிகை என்கிற அங்கீகாரத்தை பெற்றவர். கர்மா என்கிற படத்தில் அறிமுகமான இவர் 10 வருடங்களில் குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடித்து மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1969 தாதாசாகேப் பால்கே விருதை பெற்றார்.
அக்கினேனி நாகேஸ்வர ராவ்:
தர்ம பத்னியில் (1941) அறிமுகமான அக்கினேனி நாகேஸ்வர ராவ் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். பெரும்பாலும் தெலுங்கு மொழி படங்களிலேயே அதிகம் நடித்துள்ளார். இவர் 1990 ஆம் ஆண்டு தாதாசாகேப் பால்கே விருதை பெற்றார்.
Waheeda Rehman: எம்.ஜி.ஆர் - கமல்ஹாசனுடன் நடித்த நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதாசாகேப் பால்கே விருது!
சிவாஜி கணேசன்:
பராசக்தி திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழில் சுமார் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். 1960 ஆம் ஆண்டு எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற ஆப்ரோ-ஆசிய திரைப்பட விழாவில் சர்வதேச திரைப்பட விழாவில் "சிறந்த நடிகர்" விருதை வென்ற முதல் இந்திய திரைப்பட நடிகர் சிவாஜி ஆவார். அமெரிக்காவின் தி லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் அவரை "தென்னிந்திய திரைப்படத் துறையின் மார்லன் பிராண்டோ என கூறி சிறப்பித்தது. இவருக்கு தாதாசாகேப் பால்கே விருது 1996 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
கே.பாலச்சந்தர்:
திரைப்படத் இயக்குனர் கே.பாலசந்தர் நீர்க்குமிழி (1965) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த படங்களை தமிழ் திரையுலகிற்கு வழங்கிய இவர் இந்திய மொழிகளில் சுமார் 100 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி - தயாரித்துள்ளார். இவரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா புரொடக்ஷன்ஸ், 1981 இல் நிறுவப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த பெருமை இவரையே சேரும். இவருக்கு தாதாசாகேப் பால்கே விருது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
கே.விஸ்வநாத்:
கே.விஸ்வநாத் ஒலிப்பதிவாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், பின்னர் இயக்குனர், நடிகர் என தன்னை தானே மெருகேற்றிக்கொண்டவர் . அறுபது ஆண்டுகால திரைப்பட வாழ்க்கையில், விஸ்வநாத் சுமார் ஐம்பத்து மூன்று திரைப்படங்களை இயக்கியுள்ளார். தன்னுடைய படங்கள் மூலம் ஐந்து தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார் மற்றும் அவரது படைப்புகளுக்காக சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். இயக்கம் என்பதை தாண்டி 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தாதாசாகேப் பால்கே விருது 2016 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
அமிதாப் பச்சன்:
சாத் ஹிந்துஸ்தானியில் அறிமுகமான பச்சன், தனது தனித்துவமான பாரிடோன் குரலுக்காகவும், சிறந்த நடிப்புக்காகவும் மிகவும் பிரபலமானவர். பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் இவர், இதுவரை 200 க்கும் மேற்பட்ட இந்திய படங்களில் நடித்துள்ளார். இந்திய சினிமா மற்றும் உலக சினிமா வரலாற்றில் மிகப் பெரிய மற்றும் செல்வாக்கு மிக்க நடிகர்களில் ஒருவராக இருக்கும் இவருக்கு தாதாசாகேப் பால்கே விருது 2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
இப்படி ஒரு சக்தியை அனுபவித்ததில்லை! ரஜினியை போல் பாபாஜி குகையில் தியானம் செய்த தமிழ் நடிகையின் பதிவு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்:
அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் 1975 ஆம் ஆண்டு அறிமுகமான ரஜினிகாந்த் ஒரு தென்னிந்திய நடிகர் ஆவார். கோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் இவர், நடிப்பு மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் திரையுலகில் அறியப்படுகிறார். இந்திய அரசால் பத்ம பூஷன் (2000) மற்றும் பத்ம விபூஷண் (2016) ஆகிய விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. இவர் 2019 ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருதினை பெற்றார்.
வஹீதா ரஹ்மான்:
தமிழில் எம்.ஜி,ஆர் நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் டான்சராக நடித்து இருந்து, பின்னர் ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக, இருந்த வஹீதா ரஹ்மான்... கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இவருக்கு தான் இந்த ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.