தமிழகத்தில் 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை.! என்ன காரணம் தெரியுமா.?
Anna university Banned 900 Professor : போலி பேராசிரியர்களை வாழ்நாள் முழுவதும் அண்ணா பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பணிபுரியாத வகையில் தடை செய்யவும், அண்ணா பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெறுவதற்கு போலியாக பேராசிரியர்களை கணக்கு காண்பித்த தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
போல நியமனம்- செக் வைத்த அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் சிண்டிக் கேட் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானமாக, போலி பேராசிரியர்களை கணக்கு காண்பித்தது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது, அப்போத கல்லூரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. மேலும் பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்கள் நியமனம் மோசடியாக நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் 295 பொறியியல் கல்லூரிகளில், 900 ஆசிரியர்கள் போலியாக பல கல்லூரிகளில் பெயர்களை பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கல்லூரிகளுக்கு நோட்டீஸ்
இந்த விவகாரத்தில், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 295 பொறியியல் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனையடுத்து 20 சதவீதம் கல்லூரிகள் மட்டும் விளக்கத்தை அனுப்பியது. மீதமுள்ள 80 சதவீத கல்லூரி விளக்கம் அளிக்க கூடுதல் அவகாசம் கேட்டிருந்தது. இதனையேற்று விளக்கம் அளிக்க மேலும் 10 நாட்கள் கூடுதல் அவகாசம் அந்த கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டன.
போலியாக பெயர் சேர்க்கை
தற்பொழுது அந்தக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் ஆதார் எண், பான் எண் போன்றவை பதிவுச் செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகிறது. கல்லூரிகள் போலியான ஆவணங்களை அளித்தது குறித்து விளக்கம் கேட்டும் ஆசிரியர்களுக்கு நோட்டிஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்களின் பெயர்கள் ஒன்றுக்கும் மேற்பட்டக் கல்லூரிகளிலும் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ் நாள் தடை
இந்தநிலையில் தான் சிண்டிகேட் கூட்டத்தில், தமிழ்நாட்டிற்குள் உள்ள எந்தவொரு கல்லூரியிலும் மோசடியில் ஈடுப்பட்ட ஆசிரியர்கள் கற்பிப்பதில் தடை செய்யவும், போலியான தகவலை வழங்கிய கல்லூரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக போலி பேராசிரியர்களை வாழ்நாள் முழுவதும் அண்ணா பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பணிபுரியாத வகையில் தடை செய்யவும், சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.