சினிமா பாணியில் அடுத்தடுத்து மோதிய லாரிகள்! அப்பளம் போல் நொறுங்கிய கார்! ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி
கர்நாடகாவில் 2 டிப்பர் லாரிகள் அடுத்தடுத்து கார் மீது மோதிய விபத்தில் கோவிலுக்கு சென்று திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் விஜயநகர் மாவட்டம் ஹோஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் பாசவேஸ்வரர் கோவிலுக்கு சென்றுவிட்டு காரில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது விஜயநகர் புறநகரில் சுரங்கபாதை அருகே வந்துகொண்டிருந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்பை உடைத்துக்கொண்டு சாலையின் மறுபுறம் வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
அப்போது விபத்தில் சிக்கிய கார் மீது பின்னால் வந்த டிப்பர் லாரி ஒன்று அதிவேகத்தில் மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் 7 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த 6 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
car
இடிபாடுகளில் சிக்கியிருந்த 7 பேரின் உடல்கள் ஒரே வழியாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இந்த விபத்து காரணமாக நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டிப்பர் லாரி - கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கோவிலுக்கு சென்று திரும்பிய ஒரே குடும்பத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.