ADMK : அதிமுக-வில் பிளவு: எடப்பாடிக்கு எதிராக புதிய அணி.?
ஜெயலலிதா மறைவிற்குப் பின் அதிமுகவில் தொடரும் உட்கட்சிப் போட்டிகள் மற்றும் பிரிவுகளால் கட்சி பலவீனமடைந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி தனி அணி உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் புதிய பிரச்சனையை அதிமுகவின் எதிர்காலத்தை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
அதிமுகவில் உட்கட்சி மோதல்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் பலவித குழப்பங்கள் உருவாகியுள்ளது. அதிமுகவை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் சசிகலா, ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி மோதிக்கொண்டனர். இதனால் பல பிரிவுகளாக அதிமுக பிரிந்துள்ளது. இபிஎஸ்- ஓபிஎஸ் இணைந்து மீதமிருந்த 4 ஆண்டுகால ஆட்சியை நடத்தி முடித்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் 10ஆண்டுக்கு பிறகு அதிமுக ஆட்சியை பறிகொடுத்தது. இதனால் உட்கட்சி மோதல் மீண்டும் தலை தூக்கியது.
அண்ணாமலைக்கு அன்போடு போன் போட்ட ஸ்டாலின்.! உடனே ஓகே சொன்ன பாஜக
அதிமுவை மீட்க போட்டி போடும் தலைவர்கள்
இரட்டை தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒற்றை தலைமைக்கு குரல் எழுந்தது. இதனால் ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். இதே போல சசிகலா மற்றும் டிடிவி தினகரனும் அதிமுகவை மீட்க போராடி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தனி அணியை உருவாக்கினார். ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது. பல தொகுதிகளில் 3 ஆம் இடத்திற்கும், டெபாசிட் இழக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டது.
அதிமுக ஒருங்கிணைய வேண்டும்
இதனால் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராக குரல் எழுந்துள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒருங்கிணைந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என தொண்டர்கள் பேசிவருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் சேர்க்க வாய்ப்பு இல்லையென உறுதியாக உள்ளார். இதனால் அதிமுக மூத்த நிர்வாகிகளுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தற்போதுள்ள மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து கட்சியை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளார்.
தனி அணியை உருவாக்கும் எஸ்.பி.வேலுமணி.?
குறிப்பாக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளை இரண்டாக பிரித்து இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளரை நியமிக்க முடிவெடுத்தார்.
ஆனால் இதற்கு எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனி அணியை உருவாக்கி வருவதாகவும். கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மாவட்டம் மட்டுமில்லாமல் தென் மாவட்ட நிர்வாகிகளையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் தனது பக்கம் சேர்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் குஷ்பு: காரணம் இதுதான்!!
இபிஎஸ்- எஸ்.பி.வேலுமணி.?
இந்தநிலையில் தான் கடந்த வெள்ளிக்கிழமை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அடுத்த ஒரு சில தினங்களில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ரத்து செய்து விட்டு செயற்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அதிகரிப்பு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிகிறது. இதற்கு எஸ்.பி.வேலுமணி தரப்பு நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.