தமிழக அரசுக்கு எதிரான போராட்டம் வாபஸ்.! பாஜக வலைக்குள் திமுக!!
தமிழகத்தில் திமுக-அதிமுகவுக்கு எதிரான மாற்றாக பாஜக வளர்ந்து வருகிறது. தேர்தலில் வெற்றி பெற திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அவசியம் என்கிற நிலையில், சமீபத்தைய நிகழ்வுகள் திமுக-பாஜக நெருக்கத்தை காட்டுகின்றன. இது புதிய கூட்டணிக்கான தொடக்கமா அல்லது திட்டங்களை பெறுவதற்கான வியூகமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
தமிழகத்தில் திமுக- அதிமுகவிற்கு எதிராக தேசிய கட்சியான பாஜக கடும் போட்டியை கொடுத்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய அளவில் கால் ஊண்டாத பாஜக தற்போது வேகமாக வளர்ந்துள்ளது. கிராமங்களில் கூட பாஜகவின் கொடி பறக்க தொடங்கியுள்ளது. இருந்த போதும் தேர்தல் என்று வரும் போது பாஜகவிற்கு குறைவான வாக்குகளே கிடைக்கிறது. இதனால் வெற்றி என்ற இடத்தை தமிழக பாஜகவால் அடைய முடியாத நிலை உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை ஒன்று திமுகவுடன் கூட்டணி வைத்தோ அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைத்தோ தேர்தலை எதிர்கொண்டால் மட்டுமே பாஜகவிற்கு வெற்றி கிட்டுகிறது. அந்த வகையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்ததால் 4 இடங்களை பெற்றது. இதனையடுத்து நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதால் தனித்து போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது.
இந்தநிலையில் அதிமுக மற்றும் பாஜக இடையே கடும் வார்த்தை போர் அதிகரித்துள்ளது. ஒருவரை ஒருவர் மோசமாக விமர்சித்து வருகின்றனர். எனவே மீண்டும் இந்த கூட்டணி இணைவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது. எனவே பாஜகவின் பார்வை திமுக மீது விழுந்துள்ளதாக தெரிகிறது. கடந்த சில வாரங்களாக திமுகவும் பாஜகவும் தங்களது எதிர்ப்பை குறைத்துக்கொண்டுள்ளது. அந்த வகையில் பாஜகவின் ஆதரவாளராக கூறப்பட்டு வந்த தமிழக அரசின் மூத்த அதிகாரி எஸ்.கே.பிரபாகரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமித்தது. இதனையடுத்து ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்த நிலையில், தமிழக அரசு சார்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் ஆளுநரோடும், பாஜக நிர்வாகிகளோடும் முதலமைச்சர் ஸ்டாலின் நீண்ட நேரம் பேசினார். இதில் குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக மூத்த அமைச்சர் எ.வ.வேலுவை கையை பிடித்து பேசினர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை எதை எதிர்க்க வேண்டுமோ அதை எதிர்ப்போம் என கூறினார். இதனையடுத்து திமுக தலைவர் கலைஞர் நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு விழாவிற்கு அழைப்பு விடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாமலைக்கு போன் செய்து பேசியுள்ளார். அண்ணாமலையும் கலைஞரின் சாதனைகளுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும். ஸ்டாலின் என்னை அன்போடு அழைத்தார் என தெரிவித்தார்.
இந்தநிலையில் அடுத்தடுத்து ஒரு சில நாட்களில் திமுக- பாஜகவிடையேயான மோதல் குறைந்துள்ள நிலையில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றத் தவறினால், வரும் ஆகஸ்ட் 20 முதல், தமிழக பாஜக சார்பில், தொடர் போராட்டம் நடைபெறும் என்று பாஜக சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது, ஆகஸ்ட் 17 அன்று, திட்டத்தைத் தொடங்கி வைப்பதாகத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. எங்கள் முக்கியக் கோரிக்கை நிறைவேறியிருப்பதால், தமிழக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டம் கைவிடப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக அரசு பாஜகவோடு கடந்த சில வாரங்களாக இணைந்து செல்வது புதிய கூட்டணி அமைக்கவா.? அல்லது தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை பெறுவதற்கான வியூகமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.