Vijay : வரிசையில் காத்திருக்கும் மாஜி அமைச்சர்கள்.! திமுக அதிமுகவிற்கு ஷாக் கொடுக்கும் விஜய்
TVK Vijay political conference : நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை செப்டம்பர் 23 ஆம் தேதி நடத்த உள்ளார். விஜய்யின் அரசியல் வருகையால் திமுக அல்லது அதிமுகவில் யாருக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் தவெகவிற்கு பல்டி அடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரைத்துறையும் அரசியலும்
நாளைய தீர்ப்பு என்கிற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான நடிகர் விஜய், தற்போது தமிழ்நாட்டின் நாளைய தீர்ப்புக்காக அரசியல் களத்தில் காத்துள்ளார். தலைவா என்கிற படத்தின் மூலம் அரசியல் வருகையை பிரதிபலித்த நடிகர் விஜய், தனது அடுத்தடுத்த படங்களில் அரசாங்கத்தை விமர்சித்து வசனங்களை வைத்தார். சர்க்கார் படத்தின் மூலம் ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்கும் வகையிலான படத்திலும் நடித்திருந்தார். மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான கருத்தை பதிவு செய்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அரசியல் களத்தில் விஜய்
இந்தநிலையில் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் தனது அரசியல் வருகையை கடந்த ஆண்டு விஜய் உறுதி செய்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரையும் பதிவு செய்தார். பதிவு செய்த அடுத்த நொடி தனது அரசியல் இலக்காக தமிழக சட்டமன்ற தேர்தல் என அறிவித்தார். திரைத்துறையில் இருந்து விலக இருப்பதாகவும் கூறினார். இன்னும் இரண்டு படங்கள் மட்டுமே செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தினார். திராவிட கட்சிகளுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஒரே நாளில் லட்சக்கணக்கானோர் தவெகவில் இணைந்தனர்.
கொடி பாடல் வெளியீடு
இந்தநிலையில் அரசியல் களத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடங்கிய விஜய், தற்போது தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி மற்றும் பாடலை வெளியிட்டுள்ளார். இது தமிழகம் முழுவதும் வேகமாக பரவிய நிலையில் அடுத்து மாநாட்டிற்கான தேதியை அறிவித்தார். செப்டம்பர் 23ஆம் தேதி தனது முதல் மாநில மாநாட்டை அறிவித்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில் விக்கிரவாண்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. மாநாடு தொடர்பாக 21 கேள்விகளை கேட்டு தவெக நிர்வாகி புஸ்ஸி ஆனந்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
vijay
மாநாட்டிற்கு முட்டுக்கட்டை போடுகிறதா திமுக.?
அந்த நோட்டீஸில் மாநாட்டு எத்தனை மணிக்கு தொடங்குகிறது. மாநாட்டிற்கு எத்தனை பேர் வருவார்கள், மாநாடு மேடையில் அமர்பவர்கள் யார்.? மாநாடு நடைபெறும் நிலத்தின் உரிமையாளரிடம் அனுமதி பெறப்பட்டதா.? மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் எங்கே நிறுத்தப்படும். மாநாடு குடிநீர் வசதி என்ன.? மின்சாரத்திற்கு அனுமதி பெறப்பட்டதா.? மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் என்ன என கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு 5 நாட்களுக்குள் பதில் வழங்க தவெக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறையின் கேள்வி தொடர்பாக வழக்கறிஞர்களோடு விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். இன்றோ அல்லது நாளையோ பதில் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
கட்சி தாவ காத்திருக்கும் தலைகள்
இதனிடையே மாநாடு நடத்த காவல்துறை அனுமதி வழங்கவில்லையென்றால், நீதிமன்றம் மூலம் அனுமதி பெற திட்டமிடப்பட்டுள்ளது. விஜய் மாநாட்டிற்கு திமுக அரசாங்கம் திட்டமிட்டு அனுமதி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. மற்ற கட்சிகளுக்கு இது போன்று 21 கேள்விகள் கேட்கப்படவில்லையென கூறப்படுகிறது. எனவே விஜய் மாநாடு திட்டமிட்டப்படி விக்கிரவாண்டியில் நடைபெறும் என புஸ்ஸி ஆனந்த் அறிவித்துளார்.
இதனிடையே விஜய்யின் அரசியல் வருகை திராவிட கட்சிகளுக்கு ஷாக் கொடுக்கும் என அரசியல் விமர்கர்கள் கூறி வரும் நிலையில், விஜய் கட்சியில் இணைய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வரிசையில் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக மற்றும் அதிமுகவில் டம்மி செய்யப்பட்டுள்ள தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலக காத்திருப்பதாக கூறப்படுகிறது.
யார்.? யார் அந்த நிர்வாகிகள்.?
அந்த வகையில் அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில் அக்கட்சியில் இருந்து தவெகவிற்கு செல்ல ஒரு கூட்டமே காத்துள்ளது. தென் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராமநாதபுரத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரின் வாரிசுகள், இதே போல திமுகவில் இருந்து டெல்டா மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர். ராமநாதபுரத்தை சேர்ந்த பெண் எம்பி ஆகியோர் பெயர்கள் அடிபட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் விஜய் கட்சிக்கு பல்டி அடிக்க காத்துள்ளனர். மற்ற கட்சி நிர்வாகிகளை தவெகவில் இணைப்பது மாநாட்டின் போது நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாநாட்டில் இணைக்கப்படுவார்களா.?
ஆனால் மாநாட்டில் மற்ற கட்சி நிர்வாகிகள் இணைப்புக்கான விழாவாக இருக்காது. கட்சியின் கொள்கை, திட்டம் தொடர்பாக மட்டுமே மாநாடு இருக்கும் என தவெகவினர் கூறி வருகின்றனர். எனவே எதுவாக இருந்தாலும் விஜய்யின் அரசியல் வருகையால் பாதிப்பு அதிமுகவிற்கா.? அல்லது திமுகவிற்கா என்பதை சட்டமடன்ற தேர்தல் முடிவுகளில் தெரிந்து விடும்.