கண்ணீர் விட்டு கதறும் அளவுக்கு உதவியாளரை டார்ச்சர் செய்தாங்க! இதெற்கெல்லாம் அஞ்சப்போவதில்லை! அமைச்சர் எ.வ.வேலு
நாடாளுமன்ற தேர்தல் அச்சம் காரணமாகவே வருமான வரி சோதனை மூலம் அச்சுறுத்தல் என அமைச்சர் எ.வ.வேலு குற்றம்சாட்டியுள்ளார்.
நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ வேலு வீடு மற்றும் அவருக்கு தொடர்பான 40 இடங்களில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அமைச்சர் வேலு மற்றும் அவருடைய மகன் கம்பன், குமரன் ஆகியோர் தொடர்புடைய இடங்களிலும் மற்றும் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடைபெற்றது. கோவையில் அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினரான மீனா ஜெயக்குமார் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனையின் போது அருணை பொறியியல் கல்லூரி தொடர்புடைய இடங்களில் ரூ.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எ.வ.வேலு;- காசா கிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வருமான வரியை முறையாக செலுத்தி வருகின்றேன். சொந்தமாக உழைத்த பணத்தில் தான் அறக்கட்டளை, கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகின்றேன். எனக்கு நேரடியாக உள்ள சொத்து 48.33 ஏக்கர் தான். எனது சொத்துகள் குறித்து வேட்புமனுவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.
சோதனையின் போது வருமான வரித்துறையினர் எனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மன உளைச்சலை உண்டாக்கியுள்ளனர். அதிகாரிகளை குறை கூற விரும்பவில்லை. அம்பு எய்தவர்கள் எங்கோ உள்ளனர். கண்ணீர் விட்டு கதறும் அளவுக்கு உதவியாளர் நிர்பந்திக்கப்பட்டார். கேள்வி கேட்பது தவறல்ல. அச்சுறுத்தக்கூடாது. எனது குடும்பத்தினர் வீட்டில் மற்றும் கல்வி நிறுவனத்தில் இருந்து ஒரு பைசா கூட பறிமுதல் செய்யவில்லை.
நாடாளுமன்ற தேர்தல் வருவதால் திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொண்டர்களை அச்சுறுத்தி வருகிறார்கள். திமுகவினரை குறிவைத்து சோதனை நடத்துவதற்கு அஞ்ச மாட்டோம். முதலமைச்சர் ஸ்டாலின் மீசாவை பார்த்தவர், அவர் வழியில் அரவணைத்து செல்லும் எங்களின் இலக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெற வேண்டும் என்பத நோக்கமாக கொண்டு செயல்படும், அதில் யார் வந்தாலும் அஞ்சமாட்டோம் என்றார்.
உதயநிதி ஸ்டாலின் கூறியது போல பாஜகவில் ஒரு அணியாக வருமான வரித்துறை உள்ளது. எங்களை முடக்குவதற்காகவே இந்த சோதனை நடைபெற்றது. தனிப்பட்ட முறையில் என் பெயரை கலங்கப்படுத்த பல பேர் முயற்சி செய்கிறார்கள். அது எந்த காலத்திலும் நடக்காது என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.