அடுத்த மூன்று மணி நேரத்துக்கு இந்த 11 மாவட்டங்களில் டேஞ்சர் எச்சரிக்கை..!
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைப்பதும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இரவு நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியிருந்தது.
இந்நிலையில் தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி இஅடுத்த 3 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 25-26 டிகிரி செல்சியஸ் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.