ஒரே இரவில் அலறவிட்ட கனமழை.. அரண்டு மிரண்டு போன வாகன ஓட்டிகள்.. ஸ்தம்பித்துபோன சென்னை..!
சென்னையில் நேற்று இரவு கிண்டி, மயிலாப்பூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகலில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் இரவில் மழை பெய்வதும் என வித்தியாசமான வானிலை நிலவுகிறது.
இந்நிலையில், தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் அக்டோபர் 4ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னையை பொறுத்தவரை மேகமூட்டத்துடன் காணப்படும் அவ்வப்போது ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
Chennai Rain
அதன்படி நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான போரூர், மயிலாப்பூர், மதுரவாயல், வளசரவாக்கம், வானகரம், திருவேற்காடு, சைதாப்பேட்டை, பட்டினப்பாக்கம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர், கே.கே.நகர், தாம்பரம், அனகாபுத்தூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட கனமழை வெளுத்து வாங்கியது.
இதனால், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வேலைக்கு சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். கனமழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் சென்னை, மும்பை, ஐதராபாத் உள்பட பல இடங்களில் இருந்து சென்னை வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானத்தில் சுமார் 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை வட்டமடித்தன. சென்னையில் இரவு நேரங்களில் தொடர் மழை பெய்து வருவதால் ஈதமான சூழல் நிலவுகிறது.