School Holiday: விடாமல் அடிச்சு தூக்கும் கனமழை.. 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!
தொடர் கனமழை காரணமாக மதுரை,கோவை, தேனி, திருப்பூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, , மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது. அதேபோல், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மழை விடாமல் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். தொடர் கனமழை காரணமாக மதுரை, கோவை, திண்டுக்கல், தேனி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதேபோல், நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி ஆகிய 4 தாலுக்காவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.