5 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி.. பாதியிலேயே திடீர் நிறுத்தம்.. என்ன காரணம் தெரியுமா?
5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மதுரை அண்ணா நகரில் நடைபெற்ற 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, நடிகர் சூரி பங்கேற்ற நிலையில் திடீரென பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
5 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மதுரை அண்ணா நகர் பகுதியில் WOW MADURAI என்ற தலைப்பில் ஹேப்பி ஸ்ட்ரீட் வாரத்தின் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இன்று மதுரை மாநகராட்சி சார்பில் HAPPY STREET நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாநகராட்சி நிர்வாகம் எதிர்பார்த்ததை விட ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் குடும்பத்தினருடன் வந்தது நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சூரி, தமிழக பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர், ஆணையாளர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் இருந்ததால் மேடையின் முன்பு செல்வதற்கு இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் முண்டியடித்துக் கொண்டனர். எதிர்பார்த்ததை விட அதிகம் பேர் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதுடன் மயக்கம் அடைந்தனர்.
தொடர்ந்து காவல்துறையினர் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு ஒலிபெருக்கி மூலம் வலியுறுத்தி வந்தனர். குறிப்பாக பாதுகாப்பு கருதி 108 ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட போதுமான அடிப்படை வசதியும் ஏற்படுத்தி தரவில்லை. காவல்துறையினர் கட்டுக்கடங்காத அளவு கூட்டம் நிறைந்து இருந்ததால் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி பாதிலேயே நிறுத்தப்பட்டதால் பெரிதும் எதிர்பார்த்து வந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.