DMK: திமுகவில் இருந்து முக்கிய பிரமுகர் அதிரடி நீக்கம்..! என்ன காரணம் தெரியுமா?
திமுகவின் கொள்கை பரப்பு துணைச்செயலாளராக உள்ள குடியாத்தம் குமரன் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் குமரன். இவர் திமுகவில் கொள்கைப் பரப்பு துணை செயலாளராகவும், விவாத நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார். யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் அதிமுக நிர்வாகி விந்தியா குறித்து குடியாத்தம் குமரன் வீடியோ வெளியிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடிகை விந்தியா தேசிய மகளிர் ஆணையத்தில் புகாரளித்திருந்தார். இதனையடுத்து தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரையின் பேரில் குடியாத்தம் குமரன் மீது 3 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே இந்த புகாரில் அவருக்கு ஜாமீனும் கிடைத்தது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து குடியாதம் குமரன் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், பிரதமர் மோடியை விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- கழக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் குடியாத்தம் குமரன், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும். தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.