மக்கள் பணத்தை ஏமாற்றியவருக்கு வக்காலத்து வாங்குவதா.! அண்ணாமலையை இறங்கி அடிக்கும் காயத்ரி ரகுராம்
ஓய்வூதியப் பணத்தை பலர் பல ஆண்டுகளாக மயிலாப்பூர் அசோசியேஷனில் முதலீடு செய்திருக்கிறார்கள். இதனை பாஜக சார்பாக வேட்பாளராக போட்டியிட்ட தேவநாதன் யாதவ் 2024 தேர்தலுக்கு பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியிருப்பதாக காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.
நிதி நிறுவன முறைகேடு
பழமையான நிதி நிறுவனங்களில் ஒன்று மயிலாப்பூர் இந்து நிதி நிறுவனம். இந்த நிறுவனத்தில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வைப்பு தொகை வைத்துள்ளனர். மொத்தமாக 525 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள். உரிய வகையில் முதலீட்டு பணத்தை திரும்ப தராமல் 50 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.
தேவநாதன் கைது
தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் மயிலாப்பூர் இந்து நிதி நிறுவனம் முன்பு முற்றுகையிட்டனர். இதனையடுத்து 140க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் தேவநாதனை கைது செய்தனர்.
தேவநாதன் கைது- அண்ணாமலை கருத்து
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் நிறுவனத் தலைவர் தேவநாதன் யாதவை தமிழகக் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் செய்தி அறிந்தேன். மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தில், முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது. தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்தி, முதலீட்டாளர்கள் அனைவருக்கும் இதனை உறுதி செய்ய வேண்டும்.
gayathri raghuram
மக்கள் மீது அக்கறை உள்ளதா.?
அதே நேரத்தில், திமுக அரசின் சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகத் தோல்வியைச் சுட்டிக் காட்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளை அச்சுறுத்தும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்றால், அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன் என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள முன்னாள் பாஜக நிர்வாகியும், தற்போதைய அதிமுக நிர்வாகியுமான நடிகை காயத்ரி ரகுராம், பண விஷயங்களில் நீங்கள் எப்போதாவது மக்களுக்காக உங்கள் அக்கறையை உயர்த்தியுள்ளீர்களா? நீங்களும் பாஜகவும் எப்போதும் மக்களை ஏமாற்றுவதில் மறைமுகமாக ஈடுபட்டு வருகிறீர்கள். மோசடி செய்ததற்காக அவர் சட்டத்தை எதிர்கொள்ள வேண்டும். அவர் குற்றவாளி இல்லை என்றால் சட்டம் அவரை விடுவிக்கும்.
Annamalai
வக்காலத்து வாங்குவதா.?
கஷ்டப்பட்டு சம்பாதித்தவர்கள்/ஓய்வூதியப் பணம் பல ஆண்டுகளாக மயிலாப்பூர் அசோசியேஷனில் முதலீடு செய்திருக்கிறார்கள். தேவநாதன் யாதவை வேட்பாளராக பாஜக தேர்ந்தெடுத்தது, அந்த அசோசியேஷன் பணத்தை அவர் பாஜக 2024 தேர்தலுக்கு பயன்படுத்தியதாக தகவல். பணத்தை திருப்பி கொடுக்க நிறைய நேரம் கொடுக்கப்பட்டது. அப்பாவி மக்கள் ஏமாற்றப்பட்டு, இப்போது பணத்தை திருப்பித் தராதவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள். வெட்கக்கேடானது என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.