நள்ளிரவில் பயங்கரம்.. செங்கல்பட்டில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற A+ ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்!
செங்கல்பட்டு அருகே போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற பிரபல ரவுடி தணிகாவை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து இதனை தடுக்கும் நோக்கில் அவ்வப்போது என்கவுன்டர் மற்றும் ரவுடிகளை சுட்டு பிடிக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியை சேர்ந்த தணிகா என்கிற தணிகாசலம். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மூன்று மாவட்டங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. A+ ரவுடியாகவும் வலம் வந்தவர்.
இந்நிலையில் வழிப்பறி வழக்கில் தணிகா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்த தணிகாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து தனிப்படை போலீசார் தணிகாவை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்நிலையில், சென்னையில் பதுங்கி இருந்த தணிகாவை நேற்றிரவு கைது செய்து சித்தாமூர் காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர். அப்போது செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சித்துள்ளார். அப்போது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் தணிகாவின் வலது கை, வலது கால் ஆகிய பகுதிகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன.
வலியால் துடித்துள்ளார். உடனே அவரை மீட்ட போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து தணிகாவை மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். காஞ்சிபுரத்தின் பிரபல தாதாவும், ரவுடியுமான ஸ்ரீதரின் மைத்துனர் தணிகா என்பது குறிப்பித்தக்கது.