பயணிகள் கவனத்திற்கு! இந்த 3 நாட்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்காது! தெற்கு ரயில்வே!
பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம் ரயில் நிலையத்தில் ஆகஸ்ட் 15, 16, 17 ஆகிய 3 நாட்கள் விரைவு ரயில்கள் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Tambaram Railway station
தொலைதூர பயணம் குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பயணிகளுக்கு பாதுகாப்புக்காக அவ்வப்போது தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி தாம்பரம் ரயில் நிலையத்தில் நடக்கும் பணிகளால் ரயில் ரத்து, பகுதியாக ரத்து, வழித்தட மாற்றங்கள் விவரம் குறித்து தெற்கு ரயில்வே அவ்வப்போது அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.
Express Trains
இந்நிலையில் தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தாம்பரத்தில் ரயில்வே யார்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, தாம்பரம் வழியாகச் செல்லும் அனைத்து விரைவு ரயில்களும் வரும் 15, 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் தாம்பரத்தில் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Southern Railway
இந்த நாட்களில் வெளியூர்களில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கிச் செல்லும் விரைவு ரயில்கள் தாம்பரத்திற்குப் பதிலாக மேற்கு மாம்பலத்தில் நிற்கும். அதேபோல் எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்கள் தாம்பரத்திற்குப் பதிலாக செங்கல்பட்டில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Railway Alert
இதனால், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், ராமேஸ்வரம் விரைவு ரயில்களும், செங்கோட்டை, கொல்லம், காரைக்கால், மன்னார்குடி மற்றும் தேஜஸ் விரைவு ரயில்களும் தாம்பரத்தில் நிற்காது என தெரிவித்துள்ளனர்.