காளஹஸ்தி கோவிலுக்கு வந்த இடத்தில் அதிர்ச்சி.. இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த ஊழியர்..!
காளஹஸ்தியில் தனியார் விடுதியில் இளம்பெண் குளிப்பதை ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஞ்ச பூத திருத்தலங்களில் காளஹஸ்தி சிவன் கோயில் வாயுத்தலமாக விளங்குகிறது. ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ராகு - கேது தோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்பு மிக்க கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தருகின்றனர்.
இந்நிலையில், பெங்களூரை சேர்ந்த 26 வயது இளம்பெண். இவர் தனது குடும்பத்தினருடன் காளஹஸ்தி கோவிலில் தரிசனம் செய்ய வந்திருந்தார். அப்போது கோவில் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். குடும்பத்தினர் வெளியே சென்ற நிலையில் அந்த அறையில் இளம்பெண் மட்டும் குளித்துக் கொண்டு இருந்தார்.
அப்போது தனியார் விடுதியில் ஊழியராக பணியாற்றி வரும் சுரேஷ் என்பவர் ஜன்னல் வழியாக இளம்பெண் குளிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் அலறி கூச்சலிட்டுள்ளார். இதுகுறித்து தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே விடுதிக்கு விரைந்து வந்த குடும்பத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுரேஷிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். இதில் சுரேஷ் இளம்பெண் குளிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்து அழித்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.