அதிமுகவில் இருந்து 2 முக்கிய நிர்வாகிகளை இரவோடு இரவாக நீக்கிய எடப்பாடி.! என்ன காரணம் தெரியுமா.?
சீட் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக அதிமுக மாவட்ட செயலாளர் மீது கட்சி நிர்வாகிகள் புகார் அளித்தனர். இதையடுத்து, புகார் அளித்த நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
சீட் வாங்கி தருவதாக மோசடி
அதிமுக மாவட்ட செயலாளர் மீது புகார் அளித்த நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க இளைஞரணி செயலாளராக இருப்பவர் கிருஷ்ணன். இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் குமரகுரு மீது நேற்று புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் கடந்த மக்களவை தேர்தலின் போது விழுப்புரம் தொகுதியில் போட்டியிட சீட் வாங்கி தருவதாக கூறி மாவட்ட செயலாளர் குமரகுரு தன்னிடம் ஒரு கோடியே 60 லட்சம் பணம் வாங்கியதாகவும், ஆனால் சொன்னபடி சீட் வாங்கி தரவில்லையென தெரிவித்துள்ளார்.
பணத்தை திருப்பி தராத மாவட்ட செயலாளர்
இதனையடுத்து பணத்தை திருப்பி கேட்ட போது தேர்தலில் தோல்வியடைந்து உள்ளதால் பணத்தை பின்னர் தருவதாக கூறியுள்ளார். இதனால் சிறிது காலத்திற்கு பிறகுஅதிமுக தலைமை அலுவலகத்திலும் புகார் அளித்தேன் இருந்த போதும் உரிய நடவடிக்கை இல்லையென கூறியுள்ளார். இந்தநிலையில் பணத்தை திருப்பி கேட்டதால் மாவட்ட செயலாளர் குமரகுரு தன்னை தாக்கியதாகவும் மேலும் அதிமுக தலைமையிடத்தில் புகார் தெரிவித்ததால் பணம் தர முடியாத என மிரட்டுவதாகவும் கூறியிருந்தார். எனவே மாவட்ட செயலாளர் குமர குரு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருந்தார்.
நிர்வாகிகளை நீக்கிய எடப்பாடி
இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,
யாரும் தொடர்பு வைக்க கூடாது
கள்ளக்குறிச்சி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் M. கிருஷ்ணன் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் அரசூர் சிவா (எ) N. சிவக்குமார், ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.