மேட்டூர் அணைக்கு பொங்கி வரும் காவிரி.! நீர் வரத்து கிடு, கிடுவென உயர்வு.! மீண்டும் முழு கொள்ளளவை எட்டுமா.?
தமிழகத்திற்கு நீர் ஆதாரமாக இருக்கும் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு காரணமாக மேட்டூர் அணை நிரம்பியது. இருப்பினும், கர்நாடகாவில் மழை குறைந்ததால் நீர்வரத்து குறைந்தது. தற்போது மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் மேட்டூர் அணை மீண்டும் நிரம்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காவிரியும் விவசாயமும்
தமிழகத்திற்கு மட்டுமல்ல கர்நாடகவிற்கு நீர் ஆதாரமாக இருப்பது காவிரி அறாகும். இந்த காவிரி கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகிறது. குடகு, மைசூர், பெங்களூரு ஆகிய மாவட்டங்களை கடந்து தமிழ்நாட்டிற்கு வருகிறது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் இருந்து தருமபுரி சேலம் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது. மேட்டூர் அணையில் நீர் நிரம்பினால் விவசாயம் செழிக்கும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக உரிய தண்ணீரை கர்நாடகா திறக்காத காரணத்தில் மேட்டூர் அணை வறண்டு காணப்பட்டது.
குறுவை சாகுபடி பாதிப்பு
ஆண்டு தோறும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் ஆனால் அணையில் 45 அடி அளவிற்கு மட்டுமே தண்ணீர் இருந்ததால் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து வானம் பார்த்த பூமியாக காத்திருந்த விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய வகையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததை அடுத்து கர்நாடகாவில் கனமழை வெளுத்து வாங்கியது.
கொட்டித்தீர்த்த மழை- நிரம்பிய மேட்டூர் அணை
இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து கே.ஆர்.எஸ், கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து விநாடிக்கு இரண்டு லட்சம் கன அடிக்கும் கூடுதலாக நீர் காவிரி ஆற்றில் இருந்து வெளியேற்றப்பட்டது. இதனையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் உயர்ந்தது. 10 நாட்களில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளவை எட்டியது. எனவே பாசனத்திற்காக முதலில் 12ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் படிப்படியாக ஒரு லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீர் திறக்கப்பட்டது.
மீண்டும் அதிகரித்த மழை
இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடைமடை வரை காவிரி நீர் சென்று சேர்ந்தது. இந்தநிலையில் கர்நாடகாவில் மழை குறைந்ததையடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறகப்பு குறைக்கப்பட்டது. நேற்று முன்தினம் 4ஆயிரம் கன அடி நீர் மட்டுமே தமிழகத்திற்கு வந்தது கொண்டிருந்தது. இதனால் ஒகேனக்கல்லில் அருவியில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இந்தநிலையில் கர்நாடகா, ஆந்திராவில் மீண்டும் நல்ல மழை பெய்து வருவதால் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்த நீர் வரத்து
அந்த வகையில் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் நீர் வரத்து 22ஆயிரம் கன அடியில் இருந்து 25ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. எனவே பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை மீண்டும் நிரம்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது 115 அடியாக உள்ள மேட்டூர் அணையில் இருந்து 12ஆயிரத்து 700 கன அடி நீர் திறக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.