அதிகாலையில் மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்ட கணவர்.. கதறி துடித்த பிள்ளைகள்.. என்ன காரணம் தெரியுமா?
அதிகாலையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மனைவியின் தலையில் அம்மிக்கல்லை தூக்கி போட்டு கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர்(45). கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி செல்வராணி (35). இவர்களுக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினமும் வழக்கம் போல இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. கோபத்தில் இருந்த ஸ்ரீதர் சாப்பிடாமல் மனைவி மீது தீராத ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் அதிகாலை நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மனைவி செல்வராணி மீது அம்மிக்கல்லை தூக்கி போட்டுள்ளார். அலறல் சத்தத்துடன் செல்வராணி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். அம்மாவின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த பிள்ளைகள் சம்பவத்தை பார்த்து அம்மா.. அம்மா.. என்று கதறி அழுதனர். மேலும், அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது செல்வராணி ரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செல்வராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரை தேடி வந்தனர். இந்நிலையில், எடமச்சி பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மனைவி நடத்தையில் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கொலை செய்ததாக கூறியுள்ளார்.