Top 100 Colleges: அட நம்ம படிச்ச கல்லூரிகளும் இருக்கு;அப்ப நீங்க படிச்ச கல்லூரி, பல்கலைக்கழகம் இருக்கா பாருங்க
நாடு முழுவதும் சிறந்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடர்பான தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் முதல் 100 இடங்களில் தமிழக கல்லூரிகள் இடம்பெற்றுள்ளது.
ஒவ்வொரு வருடமும் மத்திய கல்வி அமைச்சகம், சிறந்த கல்லூரிகளுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் கல்வி, மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள், கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி போன்ற பிரிவுகளின் படி பொறியியல், கலை அறிவியல் மற்றும் மருத்துவம் என தரவரிசையை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான தரவரிசையில் வேலூர் சிஎம்சி 3வது இடம், புதுச்சேரி ஜிப்மர் 5வது இடம் பிடித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம், ஒட்டுமொத்தமாக தேசிய அளவில் சிறந்த கல்வி நிலையம் மற்றும் சிறந்த பொறியியல் கல்லூரி ஆகிய இரண்டு பிரிவுகளில் இந்த ஆண்டு பின்னடைவை சந்தித்துள்ளது.
தேசிய அளவில் சிறந்த கல்லூரிகள் என்ற பிரிவில் கடந்த ஆண்டு 18 ஆவது இடத்தை பிடித்த அண்ணா பல்கலைக்கழகம், இந்த ஆண்டு 20-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேபோல சிறந்த பொறியியல் கல்லூரிகள் என்ற பிரிவில், கடந்த ஆண்டு 13வது இடத்தை பிடித்த அண்ணா பல்கலைக்கழகம் , இந்த ஆண்டு ஒரு இடம் கிழே இறங்கி 14வது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல சிறந்த பல்கலைக்கழகங்கள் என்ற பிரிவில், கடந்த ஆண்டு 14-வது இடத்தை பிடித்த அண்ணா பல்கலைக்கழகம், இந்த ஆண்டு ஒரு இடம் முன்னேறி 13வது இடத்தை பிடித்துள்ளது. அதே நேரத்தில் சிறந்த மாநிலப் பல்கலைக்கழகம் என்ற பிரிவில் அண்ணா பல்கலைக்கழகம் முதல் இடம் பிடித்துள்ளது.
இதில் முக்கியமாக 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் சென்னை நந்தனம் கல்லூரி அரசு ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தரவரிசையில் இடம் கிடைத்துள்ளது. இதில் நாடு முழுவதும் உள்ள 3 ஆயிரத்து 371 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சென்னையில் நந்தனம் அரசு கலைக்கல்லூரி 200 முதல் 300 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது. நந்தனம் அரசு கலை அறிவியல் கல்லூரி தேசிய தரவரிசையில் இடம் பெறுவது இது முதல் முறையாகும்.
இந்த தரவரிசை பட்டியலில் கோயம்புத்தூர் PSGR கிரிஷணம்மாள் பெண்கள் கல்லூரி 7வது இடத்தையும், சென்னை லயோலா கல்லூரி 8வது இடத்தையும் பிடித்துள்ளது. கோயம்புத்தூர் பிஎஸ்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 11வது இடமும், சென்னையின் முக்கிய கல்லூரியான மாநிலக் கல்லூரி 13வது இடமும் கிடைத்துள்ளது. மெட்ராஸ் கிரிஷ்டியன் கல்லூரி 14வது இடத்தையும் அடுத்த இடமாக 15வது இடத்தை மதுரை தியாகராஜர் கல்லூரி பிடித்துள்ளது. இதில் முக்கியமாக திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரிக்கு 25வது இடமும் . தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி 28வது இடத்தையும் சென்னை ஸ்டெல்லா மாரிஸ் பெண்கள் கல்லூரி 30வது இடத்தை பிடித்துள்ளது.
திருச்சி பிஸப் ஹீப்பர் கல்லூரிக்கு 33வது இடம், பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் கல்லூரிக்கு 36வது இடம், கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி 37வது இடம். திருச்சி பெண்கள் கல்லூரியான ஹோலிகிராஸ் கல்லூரிக்கு 41வது இடம், மார்த்தாண்டம் நேசமணி மெமோரியல் கிரிஸ்டியன் கல்லூரி 42வது இடம், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி 44வது இடம், திருப்பத்தூர் செக்ரெட் ஹார்ட் கல்லூரி 47வது இடத்தை பிடித்துள்ளது. கோயம்புத்தூர் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 52வது இடத்தை பிடித்துள்ளது. மதுரை அமெரிக்கன் கல்லூரி 54வது இடத்தையும், . கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி 56வது இடத்தை இந்த தரவரிசை பட்டியலில் பிடித்துள்ளது.
இதே போல திருச்சி ஜமால் முகமது கல்லூரி, சிவகாசி அய்யா நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரி, சென்னை பெண்கள் கிரிஸ்டியன் கல்லூரி, சென்னை ராணி மேரி கல்லூரி, சென்னை ஸ்கூல் ஆஃப் சோசியல் வொர்க், கோயம்புத்தூர் டாக்டர் NGP கலை மற்றும் அறிவியல் கல்லூரி காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரிகள் முதல் 75 இடங்களை பிடித்துள்ளது.