Governor Ravi : ஆளுநர் ரவிக்கு அதிர்ச்சி கொடுத்த அரசியல் கட்சிகள்.! அடுத்தடுத்து அறிவிப்பால் ஷாக்கான ராஜ்பவன்
ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து சுதந்திர தினத்தையொட்டி தேநீர் நிகழ்வை திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், சிபிஎம் சிபிஐ மற்றும் மனித நேய மக்கள் கட்சி புறக்கணித்துள்ளன.
ஆளுநர் தமிழக அரசு மோதல்
தமிழக ஆளுநர் ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. கடந்த 3ஆண்டுகளாக ஆளுநராக இருக்கும் ஆளுநர் ரவி தமிழக அரசின் செயல்பாடுகளை அவ்வப்போது விமர்சித்து கருத்து தெரிவித்து வருகிறார். மேலும் தமிழக சட்டமன்றத்தில் அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல் புறக்கணித்தார்.
தமிழ்நாடு என்பதை தமிழகம் என மாற்ற முயன்றார். கல்லூரி நிகழ்வுகளில் இந்துத்துவா கருத்துகளை கூறுவதாகவும் தொடர்ந்து பல்வேறு புகார்களில் ஆளுநர் ரவி சிக்கினார். இதனால் ஆளுநர் ரவிக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறது.
ஆளுநர் தேநீர் விருந்து
இந்த சூழ்நிலையில் குடியரசு தின விழா, பொங்கல், சுதந்திர தின விழாவில் ஆளுநர் மாளிகை சார்பில் அரசியல் கட்சி தலைவர்கள், நீதிபதிகள், மூத்த அரசு அதிகாரிகளுக்கு தேநீர் விருந்து வழங்கப்படும். இதில் முதலமைச்சர் மற்றும் எதிர்கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள். ஆனால் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுக கூட்டணி கட்சிகள் இந்த விருந்தை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். இந்தநிலையில் சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் மாளிகை சார்பில் தேநீர் விருந்து அழைப்பிதழ் அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் மாளிகை சார்பாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
தமிழக நலனுக்கு எதிராக ஆளுநர்
தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த எழுபதாண்டுகளில் இல்லாத அளவிற்கு நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில் ஆளுநர்களின் செயல்பாடுகள் கட்சி அரசியல் சார்ந்ததாக அமைவதில் மக்களாட்சியின் மாண்புகள் சீர்குலைக்கப்படுகிறது. அவ்வகையில் தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்ற நாளிலிருந்து தமிழ்நாட்டின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராகவே தமிழ்நாட்டின் ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன.
காங்கிரஸ் புறக்கணிப்பு
மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிப்பதில் முட்டுக் கட்டை போடுவாதால், பட்டப்படிப்பு முடிந்தும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு நிகழ்வு நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும், ஆளுநர் பதவிக்காலம் முடிந்தும் அந்தப் பதவியில் தொடர்வது அரசமைப்புக்கு எதிரானது. அதனால், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக புறக்கணிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
சிபிஐ, சிபிஎம்,மமக புறக்கணிப்பு
இதே போல மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு துறைகளில் வளர்ச்சியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை இன்று வரை வழிநடத்துவது திராவிடச் சித்தாந்தமே. திராவிடச் சித்தாந்தத்திற்கு எதிராகத் தொடர்ந்துவெளிப்படையாகக் குரல் கொடுத்து வருகிறார். தனது பதவிக் காலம் முடிந்த பின்னரும்இன்னும் பதவியில் நீடித்து இருப்பது ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானது. எனவேமனிதநேய மக்கள் கட்சி ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகளான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் ஆளுநர் தேநீர் விருதை புறக்கணித்துள்ளது.