இலவசமாக மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம்.!விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு-யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா
தென் சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தையல் பயிற்சி பெற்ற, 18 முதல் 60 வயதிற்குட்பட்ட தகுதியான மாற்றுத்திறனாளிகள் ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசு திட்டங்கள்
தமிழக அரசு சார்பாக பல்வேறு நலத்திடங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மகளிர் உரிமை தொகை, தமிழ் புதல்வன், புதுமைப்பெண் ஆகிய திட்டங்களில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் சிவில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி தொகை மற்றும் இலவசமாக ஸ்மார்ட் போன் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலவச தையல் இயந்திரம்
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் சென்னை எல்லைகுட்பட்ட 18 வயதிலிருந்து 60 வயதிற்குட்பட்ட செவித்திறன் பாதிக்கப்பட்ட/ கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் 75% மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய தாய்மார்கள் மற்றும் மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தையல் பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்காணல் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யும் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
ஆவணங்கள்
1.மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் UDID அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.
2. இரு கைகளும் நல்ல நிலையில் உள்ள கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள். 75% மேல் உள்ள மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் தாய்மாராக இருத்தல் வேண்டும்.
3. அதிகபட்ச வயது வரம்பு 18 முதல் 60 ஆகும்.
4.தையல் பயிற்சி பயின்றதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க அழைப்பு
தென் சென்னையை சார்ந்த மேற்காணும் தகுதிகள் உடைய மாற்றுத்திறனாளிகள் 19.08.2024 க்குள் இ-சேவை மையம் வாயிலாக https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணைப்பில் மாற்றுத்திறனாளிகள் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கேட்டுக்கொண்டுள்ளார்.
குறைந்த விலையில் ரயில் டிக்கெட்டை வாங்கலாம்.. எப்படி தெரியுமா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!