Mettur : மேட்டூர் அணைக்கு நீர் வரத்து முற்றிலுமாக சரிந்தது.! ஒகேனக்கல்லில் 23 நாட்களுக்கு பிறகு விலகியது தடை
கர்நாடகா அணைகளில் இருந்து கடந்த சில நாட்களாக ஒரு லட்சம் முதல் 2 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது நீர் வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளதையடுத்து தமிழக எல்லைக்கு ஒகேனக்கல்லிக்கு 8 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே வந்துகொண்டுள்ளது.
காவரியும் மேட்டூரும்
டெல்டா விவசாயிகளின் ஒரே நம்பிக்கை காவிரி ஆறு, காவிரி ஆற்றில் தண்ணீர் வந்தால் விவசாயம் செழிப்பாக இருக்கும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேட்டூர் அணையில் நீர் வரத்து உரிய முறையில் இல்லாத காரணத்தால் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. கர்நாடக மாநில மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உருவாகும் காவிரி பல மாவட்டங்களை கடந்து தமிழகத்திற்கு வருகிறது. தமிழக எல்லையான பில்லிகுண்டுவில் இருந்து தருமபுரி, சேலம் வழியாக மேட்டூர் அணைக்கு காவிரி நீர் செல்லும்.
Mettur Dam
நிரம்பி வழிந்த கர்நாடக அணைகள்
கடந்த மாதம் முதல் வாரத்தில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 40 அடிக்கும் கீழே இருந்தது. இதனால் விவசாயத்திற்கு உரிய முறையில் தண்ணீர் திறக்க முடியவில்லை. கர்நாணக அரசும் தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை உரிய முறையில் வழங்கவில்லை. இந்த சூழ்நிலையில் தான் கர்நாடக மாநில நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அங்குள்ள கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகள் நிரம்பியது. இதனையடுத்து அங்கிருந்து தண்ணீர் திறக்க வேண்டிய கட்டாயம் கர்நாடகா அரசுககு ஏற்பட்டது.
Mettur Dam
முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை
ஒரு கட்டத்தில் கர்நாடக அணைகளில் இருந்து இரண்டு லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடு,கிடுவென உயர்ந்தது. ஒரே வராத்தில் முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த சூழ்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் மழை நின்றதால் அங்குள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. தற்போது 15ஆயிரம் கன அடி வீதம் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது.
பரிசல் இயக்க அனுமதி
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை வினாடிக்கு 12000 கனடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 8ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்க அனுமதி வழங்கி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் அருவியில் குளிக்கவும் தடை தொடர்கிறது.
மேட்டூர் அணை நீர்மட்டம்
தற்போது மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியில் இருக்கும் நிலையில் உபரி நீரை அப்படியே வெளியேற்றப்படுகிறது. அந்த வகையில் தற்போது 10ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. வரும் நாட்களில் மழையின் தீவிரத்தை பொறுத்து கூடுதல் நீர் திறப்பதும் குறைப்பதும் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.