வயநாடு நிலச்சரிவு.! பாதிக்கப்பட்டவர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் மனித நேயம் - நெகிழும் கேரள மக்கள்
வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழகம் மட்டுமில்லாமல் பல மாநிலங்களில் இருந்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு லட்சக்கணக்கில் பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். இது மட்டுமில்லாமல் வயநாடு மக்களுக்கு நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.
வயநாடு நிலச்சரிவு
வயநாட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விபத்தில் சிக்கி 400 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டவர்களின் நிலை கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்த இடம் தெரியாமல் மாயமாகியுள்ளது. நிலச்சரிவில் சிக்கிய மக்கள் மீட்கப்பட்டு அங்குள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வயநாடு நிலச்சரிவு - நிவாரண உதவி அறிவிப்பு
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 6 லட்ச ரூபாயும், காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரையிலும் நிவாரண நிதி அளிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இந்தநிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் பலரும் நிதி உதவி செய்து வருகின்றனர். ஏராளமான மக்கள் மூட்டை, மூட்டையாக அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றனர்.
திமுக, அதிமுக நிதி உதவி
இந்த நிவாரண பொருட்கள் மலை போல் குவிந்து காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை அங்குள்ள தன்னார்வலர்கள் பிரித்து வழங்கி வருகின்றனர். இதனிடையே விபத்து நடைபெற்ற உடனடியாக தமிழக அரசு சார்பாக 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதே போல அதிமுகவும் ஒரு கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்கியது. வயநாடு நிலச்சரிவு நிவாரண உதவித் தொகையாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ரூ.10 கோடி அறிவித்துள்ளார்.
நடிகர்கள் நிதி உதவி
கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு கமல்ஹாசன் ரூ. 25 லட்சம் வழங்கினார். நடிகர் சிரஞ்சீவி ரூ.1 கோடி அளித்த நிலையில், நடிகர் பிரபாஸ் 2 கோடி ரூபாயை கேரள அரசுக்கு நிவாரண நிதியாக தந்துள்ளார்.விக்ரம் தான். அவர் ரூ.20 லட்சம் வழங்கினார். இதைத்தொடர்ந்து நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா ஆகியோர் இணைந்து ரூ.50 லட்சம் வழங்கினர். நடிகர் தனுஷ் 20 லட்சம் ரூபாயும் வழங்கினார்.
அள்ளிக்கொடுக்கும் தனியார் நிறுவனங்கள்
இதே போல பல்வேறு தொழில் நிறுவனங்களும் பல கோடி ரூபாய் நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் பல மாவட்டங்களில் மொய் விருந்து நடத்தி அதில் வருகிற பணத்தை வயநாட்டில் உறவினர்களையும், உடமைகளை இழிந்து தவித்து வரும் மக்களுக்கு உதவிடும் வகையில் பல லட்சங்களை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் கேரள மாநிலம் வயநாட்டில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மார்ட்டின் குழும நிர்வாக இயக்குனர் சார்லஸ் மார்ட்டின் 2 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். வயநாட்டில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு முயற்சிகளுக்கு 2 கோடி ரூபாய் வழங்கியுள்ள மார்ட்டின் நிறுவனம்,
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி
அதில் ஒரு கோடி ரூபாயை, முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கும், மேலும் ஒரு கோடி ரூபாயை, இயற்கை பேரிடர்களின் போது நிவாரண பணிகளில் தீவிரமாக ஈடுபட்ட ரோட்டரி சங்கம் மூலம் நிவாரணப் பொருட்கள், மருத்துவ உதவி மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளை விநியோகிக்கவும் வழங்கியுள்ளதாக மார்ட்டின் குழும நிர்வாக இயக்குநர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார். இதனிடையே நிவாரண உதவி வழங்கி வரும் மக்களுக்கும் தொழில் நிறுவனங்களும் கேரள மக்கள் நன்றி தெரிவித்துவருகின்றனர்.