இன்று ஆவணி பௌர்ணமி... கிரிவலம் செல்ல உகந்த நேரம் இதுதான்!
Avani Pournami 2024 : இன்று ஆவணி மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான பௌர்ணமி என்பதால், கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் ஆவணி மாதத்திற்கான பௌர்ணமி இன்று (ஆகஸ்ட் 19) தான். ஆவணி மாதத்திற்கான பௌர்ணமியானது அவிட்ட நட்சத்திரத்துடன் இணைந்து வருவதால், இதை ஆவணி அவிட்டம் என்று ஒவ்வொரு வருடமும் கொண்டாடுவது வழக்கம்.
குறிப்பாக, இந்த ஆண்டு ஆவணி மாத பௌர்ணமி சிவ வழிபாட்டுக்குரிய திங்கள் கிழமையில் வந்திருப்பதால், அது இன்னும் சிறப்பு வாய்ந்ததாகும்.
மேலும் பௌர்ணமி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது திருவண்ணாமலை கிரிவலம் தான். புண்ணிய மற்றும் முக்தி தரக்கூடிய சிறப்பான புண்ணிய தளம் இதுவாகும். பஞ்சபூத தலங்களில் இது அக்னித்தலமாகவும், சிவனே மலை வடிவமாக காட்சி தருவதாகவும் சொல்லப்படுகிறது.
சுமார் 14 கிலோமீட்டர் அளவிலான சுற்றுவட்ட பாதையில், ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி அன்று, பல இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து, அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு அருளைப் பெறுவது வழக்கம்.
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரத்தை அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் வெளியிடும். அதன்படி, இன்று ஆவணி மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான பௌர்ணமி என்பதால், கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இன்று பவுர்ணமி என்பதால் அதிகாலை 2:58 மணி தொடங்கி மறுநாள் அதாவது 20ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை 1:02 மணிக்கு நிறைவடைகிறது. இந்த குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம்.