TN BJP President : அண்ணாமலையின் ராஜினாமா கடிதம் ஏற்பா.? தமிழக பாஜகவின் புதிய தலைவர் இவரா.? வெளியாகும் தகவல்
தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை லண்டன் சென்று படிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், புதிய தலைவராக யாரை நியமிக்கலாம் என்ற ஆலோசனை தொடங்கியுள்ளது. அந்த வகையில் வானதி சீனிவாசன் அல்லது நயினார் பெயர்கள் ரேசில் உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக பாஜக வளர்ச்சி
தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு போட்டியாக பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வளர்ச்சியை கண்டுள்ளது. பாஜக மாநில தலைவராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன் ஆகியோர் பாஜகவை பொதுமக்கள் மத்தியில் வேகமாக கொண்டு சென்றனர். இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் ஐபிஎஸ் அதிககாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு மோடியின் ஆட்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் பாஜகவை இணைந்தார்.
புதிய தலைவராக அண்ணாமலை
தமிழகத்தில் எல்.முருகன் பாஜக தலைவராக இருந்தபோது துணை தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக பல ஆண்டுகளுக்கு பிறகு 4 இடங்களை பெற்றது. இதற்கு பரிசாக மாநில தலைவராக இருந்த எல் முருகனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கியது மட்டுமல்லாமல் மத்திய அமைச்சரவையிலும் பாஜக இடம் வழங்கியது. இதனையடுத்து தமிழக பாஜகவின் வளர்ச்சியை மேலும் தீவிர படுத்த ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து பதவி விலகிய அண்ணாமலையை மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.
திராவிட கட்சிகளுக்கு போட்டியாக பாஜக
தமிழகத்தில் மற்ற பாஜக தலைவர்கள் மென்மையான அரசியலை கையாண்ட நிலையில் அண்ணாமலை அதிரடி அரசியலை கையில் எடுத்தார். அவரது தலைமையின் கீழ் பாஜக தீவிரமாக செயல்பட தொடங்கியது. தனது அதிரடி செயல்பாட்டால் ஆளுங்கட்சியான திமுகவிற்கு அதிமுகவிற்கும் போட்டியாக உருவெடுத்தார்.
திமுக அரசின் செயல்பாடுகளையும் அடுத்தடுத்து விமர்சித்து அறிக்கை வெளியிட்டது மட்டுமில்லாமல் அவ்வப்போது போராட்டங்களையும் நடத்தினார். நாடாளுமன்றத் தேர்தலில் குறிக்கோளாக வைத்து தீவிரமாக செயல்பட்டு வந்தவர் தமிழகம் முழுவதும் நடை பயணத்தையும் மேற்கொண்டார்.
Annamalai
தோல்வியை தழுவிய பாஜக
ஆனால் அதிமுகவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனி அணியை உருவாக்கியது. ஆனால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் பல இடங்களில் டெபாசிட்டையும் இழந்து 39 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. இதனால் அண்ணாமலையின் தலைமைக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தது. மேலும் பாஜகவின் மூத்த தலைவர்களுக்கு அண்ணாமலையின் பதவி காலத்தில் உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.
வெளிநாடு செல்லும் அண்ணாமலை
இந்தநிலையில் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 'சர்வதேச அரசியல்' என்ற தலைப்பில் ஆண்டு தோறும் சான்றிதழ் படிப்புக்காக, அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. அந்த வகையில் பாஜக மாநில தலைவர அண்ணாமலை இந்த படிப்பிற்காக ஆகஸ்ட் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை லண்டனில் தங்கி படிக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் தமிழக பஜகாவிற்கு புதிய தலைவரை நியமிக்கலாமா.? அல்லது பொறுப்பு தலைவரை நியமிக்கலாமா என்ற ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில் அண்ணாமலை தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்ததாகவும், அதனை மத்திய தலைமை ஏற்கெடுத்துக் கொண்டதாகவும் தகவல் வெளியானது.
vanathi srinivasan
புதிய தலைவர் யார்.?
எனவே தமிழகத்தில் அடுத்து யாரை தலைவராக நியமிக்கலாம் என ஆலோசனை தொடங்கியுள்ளதாகவும், இந்த ரேசில் தற்போது தமிழக சட்டமன்ற பாஜக தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் மற்றும் தேசிய மகளிர் அணி தலைவியாக இருக்கும் வானதி சீனிவாசன் இடையே போட்டி உருவாகி உள்ளது. இதில் வானதி சீனிவாசன் தமிழக பாஜக தலைவர் பதவியே கைப்பற்றுவார் எனக் கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்கள் வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது