மகளிர்களுக்கு 5 லட்சத்தை அள்ளி தரும் தமிழக அரசு.! யாருக்கெல்லாம் கிடைக்கும்.! விண்ணப்பிப்பது எப்படி.?
தமிழக அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிரை நில உடைமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் 'நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், விவசாய நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும்.
தமிழக அரசு சார்பாக பல்வேறு நலத்திடங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மகளிர் சொந்த காலில் நிற்க வேண்டும் என பல்வேறு திட்டங்கள் மகளிர் சார்ந்து செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் விடியல் திட்டத்தின் மூலம் பேருந்தில் பயணிக்கும் அனைத்து பெண்களுக்கும் இலவச பயணத்தை தமிழக அரசு உறுதி செய்தது. இதனையடுத்து மகளிர் உரிமை தொகை என்கிற திட்டத்தின் மூலம் இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை பெண்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர்.
இதன் அடுத்தக்கட்டமாக சமூக நலத்துறை சார்பில் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் மூலம் 200 பெண்களுக்கு சுயதொழிலுக்காக ரூ.50 ஆயிரம் வீதம் மானியம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதற்கான அரசாணையும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டது. இதன் படிகைம்பெ்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள் என வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 200 பயனாளிகளுக்கு, நடமாடும் உணவகங்கள், பழங்கள், காய்கறிகள், சலவைகடைகள் போன்ற சுய தொழில் செய்ய ஒரு பயனாளிக்கு ரூ.50 ஆயிரம் வீதம், 200 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி செலவில் மானியம் வழகுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. உடனடியாக சமூகநலத்துறையில் விண்ணப்பிக்க கேட்டுக்கொண்ட தமிழக அரசு இதற்கான நிபந்தனைகளையும் அறிவித்திருந்தது.
இதனையடுத்து தற்போது புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் தான் 'நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்' கடந்த நிதி மானிய கோரிக்கை அறிவிப்பின் போது விவசாயத் தொழிலாளர்களாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை நில உடைமையாளர்களாக உயர்த்தி சமூக நீதியை நிலை நாட்டும் திட்டம். இது மகளிரின் பெயரில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பில் 50% அல்லது அதிகபட்சம் ரூ.5.00 இலட்சம் மானியம் வழங்கப்படும். நடப்பு நிதியாண்டில் ரூ.20.00 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி அறிவித்திருந்தார்.
திட்டத்தை பெற தகுதிகள்
18 வயது முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்
குடும்ப வருமானம் 3 லட்சத்திற்கு மேல் இருக்க கூடாது.
விண்ணப்பிக்கும் நபர் விவசாயியாக இருக்க வேண்டும்
விண்ணப்பிப்பவருக்கு சொந்தமான நிலம் இருக்க கூடாது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், அதிகபட்சமாக 2½ ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கி கொள்ள அரசு அனுமதித்துள்ளது.
சலுகைக்கள்
நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தின் கீழ் வாங்கப்படும் விவசாய நிலங்களுக்கு 100% முத்திரை தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் விலக்கு
நிபந்தனைகள்
நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தின் கீழ் வாங்கிய நிலத்தை 10 ஆண்டுகளுக்கு இன்னொருவருக்கு விற்பனை செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயனாளிகள் வங்கி கடன் மூலமாக நிலம் வாங்கி கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தின் கீழ் மானியத்துடன் விவசாய நிலம் வாங்க விரும்பும் ஆதிதிராவிடர், பழங்குடியின மகளிர், மாவட்டம் தோறும் செயல்பட்டு வரும் தாட்கோ மாவட்ட மேலாளரை அணுக வேண்டும் எனவும் இந்த திட்டத்திற்கான விண்ணப்ப விநியோகம் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.