இன்று லண்டன் செல்கிறார் அண்ணாமலை.! மாநில தலைவர் பதவியில் மாற்றமா.? இல்லையா.?
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லண்டனில் படிக்கச் செல்வதால், கட்சிக்கு புதிய தலைவரா? அல்லது தற்காலிக தலைவரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 4 மாதங்கள் அண்ணாமலை இல்லாத நிலையில், கட்சியின் தலைமைப் பொறுப்பை யார் ஏற்பார்கள் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் பாஜக
தமிழகத்தில் திமுக- அதிமுகவிற்கு போட்டியாக பாஜகவை வளர்க்க தேசிய தலைமை தீவிரமாக முயன்று வருகிறது. பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்த பாஜகவால் தமிழகத்தில் அதிக பட்சமாக 4 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற முடியாத நிலை உள்ளது. அதுவும் திமுக, அதிமுகவின் கூட்டணி தேவை என்ற நிலை உள்ளது. இந்தநிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பாஜக தென் மாநிலத்தின் மீது தனது பார்வையை திருப்பியது.
அண்ணாமலையின் அதிரடி அரசியல்
இதனையடுத்து தமிழிசை, எல்.முருகன் என தமிழக பாஜகவிற்கு தலைவர்களை நியமித்தது. இந்த இரண்டு பேரும் கட்சியின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுத்து தமிழகத்தில் பட்டி தொட்டியெங்கும் பாஜகவை கொண்டு சேர்த்தார். அடுத்ததாக 2021ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இவரது அதிரடி அரசியலின் காரணமாக இளைஞர்கள் மத்தியில் பாஜகவின் மீதான ஆர்வம் அதிகரித்தது. ஆளுங்கட்சியான திமுக- அதிமுக என இரண்டு கட்சிகளையும் தனது பேச்சால் ஆட்டம் கான வைத்தார்.
அரசியலுக்கு இடைக்கால ஓய்வு
இந்தநிலையில் தான் கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனது தலைமையில் தனி அணியை உருவாக்கியது. பாமக, தமாகா ஆகிய கட்சிகளையும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களையும் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் தமிழகத்தில் போட்டியிட்ட 39 தொகுதிகளிலும் தோல்வியை அடைந்தது.
ஒரு சில தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்தது. இதனையடுத்து 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறிக்கோளாக வைத்து அண்ணாமலை செயல்பட்டு வரும் நிலையில், திடீரென அரசியலுக்கு தற்காலிக ஓய்வு கொடுத்து விட்டு அண்ணாமலை லண்டனில் படிக்க செல்லவுள்ளார்.
படிக்க செல்லும் அண்ணாமலை
இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 'சர்வதேச அரசியல்' என்ற தலைப்பில் ஆண்டு தோறும் சான்றிதழ் படிப்பிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேர்வாகியுள்ளார். இந்த படிப்பிற்காக இன்று நள்ளிரவு லண்டன் செல்லும் அண்ணாமலை ஜனவரி மாதம் வரை அங்கே தங்கி படிக்கவுள்ளார். இதன் காரணமாக சுமார் 4 மாதங்கள் தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் இல்லாத சூழல் உருவாகியுள்ளது..
புதிய தலைவர் யார்.?
இதனையடுத்து தற்காலிக தலைவராக யாரை நியமிக்கலாம் என பாஜக தேசிய தலைமை ஆலோசனை நடத்தியது. அந்த வகையில் நடிகை குஷ்புவை தமிழக பாஜக தலைவராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இது தொடர்பான அறிவிப்பு எதுவும் இதுவரை வரவில்லை. ஒருவேளை இன்று மாலையோ அல்லது நாளை காலையோ புதிய தலைவர் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் புதிய தலைவரை நியமிக்க வாய்ப்பு இல்லையென்றும் அண்ணாமலையே தொடர்வார் என கூறப்படுகிறது.