சினிமா பாணியில் நடந்த பயங்கரம்.. ஊராட்சி மன்ற தலைவரின் மகன் நாட்டு வெடிகுண்டு வீசி ஓட ஓட விரட்டி படுகொலை..!
செங்கல்பட்டு அருகே ஊராட்சி மன்ற தலைவரின் மகனும், அதிமுக கவுன்சிலர் அன்பரசன் நாட்டு வெடிகுண்டு வீசி ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் ரவி. இவரது 2வது மகன் அன்பரசு (34). 9வது வார்டு உறுப்பினராக பொறுப்பு வகித்து வந்தார். நேற்று இரவு கீரப்பாக்கம் பகுதியில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காரில் நண்பர்களுடன் அன்பரசு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது காரில் வந்து கொண்டிருந்த போது மறைந்து இருந்த மர்ம கும்பல் கவுன்சிலர் அன்பரசன் கார் மீது இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இதில், கார் கண்ணாடி உடைந்தது. இதனையடுத்து, அன்பரசு மற்றும் அவரது நண்பர்கள் காரிலிருந்து இறங்கி தப்பி ஓடினர். ஆனால், அந்த கும்பல் அன்பரசனை விடாமல் ஓட ஒட விரட்டி கை, கால்கள், முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அன்பரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர், அந்த ரவுடி கும்பல் மின்னல் வேகத்தில் தப்பியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் அன்பரசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி மன்ற தலைவரின் மகன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் புறநகர் மாவட்டமாக இருக்கக்கூடிய செங்கல்பட்டில் கடந்த சில மாதங்களாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.