ஒரு உயர்ந்த சக்தி உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது! வினேஷ் போகத்திற்கு சமந்தா ஆதரவு!
மல்யுத்த போட்டியில், இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிப்போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத்திற்கு ஆதரவாக தற்போது நடிகை சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
பிரான்ஸ் தலைநகரான பாரிஸில், தற்போது 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதுவரை இந்தியாவுக்கு மூன்று வெண்கல பதக்கங்கள் கிடைத்துள்ளன. மேலும் 50 கிலோ எடை பிரிவில் மகளிருக்கான மல்யுத்த போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி கிடைக்க வாய்ப்புகள் இருந்தன. ஆனால் சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை தகுதி நீக்கம் செய்துள்ளது ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.
50 கிலோ எடை பிரிவில், நேற்று நடைபெற்ற மகளிருக்கான மல்யுத்த போட்டியின் எலிமினேஷன் சுற்றில் ஜப்பானில் சேர்ந்த வீராங்கனியை எதிர்கொண்ட வினேஷ் போகத் அவரை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தார். கால் இறுதி போட்டியில், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த வீராங்கனை உடன் மோதிய வினேஷ் போகத் 3-2 என்கிற கணக்கில் வெற்றி பெற்றார்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதி போட்டியில் கியூபா நாட்டைச் சேர்ந்த வீராங்கனையை எதிர்கொண்ட வினேஷ் போகத் 5-0 என்கிற புள்ளி கணக்கில் வெற்றி வாகை சூடினார். இறுதி போட்டியில் வினேஷ் போகத் கண்டிப்பாக தங்கம் அல்லது வெள்ளி வெல்லப்போவது உறுதி என கூறப்பட்டநிலையில் , அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது. ஆனால் வினேஷ் போகத் 50 கிலோ எடையை விட கூடுதல் எடையுடன் இருப்பதாக கூறி அவரை இறுதி போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ளது ஒலிம்பிக் குழு.
இந்த தகவல் ஒட்டுமொத்த இந்தியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் வினேஷ் போகத்துக்கு ஆதரவாக தொடர்ந்து பிரதமர் மோடி உட்பட, பலர் சமூக வலைதளத்தில் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் நடிகை சமந்தா போட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, "சில நேரங்களில், மிகவும் நெகிழ்ச்சியான நபர்கள் கடினமான தடைகளை எதிர்கொள்கின்றனர். நீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஒரு உயர்ந்த சக்தி உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சிரமங்களுக்கு மத்தியிலும் நிலைத்து நிற்கும் உங்களின் அசாத்திய திறமை உண்மையிலேயே போற்றத்தக்கது" என தெரிவித்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.