Pongal Gift 2025 : பொங்கல் பரிசாக ரூ 5000 கொடுக்குமா தமிழக அரசு.? மக்களுக்கு அடிக்குமா ஜாக்பாட்
தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகை உயர்த்தப்படுமா இல்லையா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. அரசியல் கட்சிகள் 5000 ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் நிதி நெருக்கடியை காரணம் காட்டி அரசு அதிகாரிகள் வழக்கமான 1000 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என்கின்றனர்.
பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையொட்டி கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்களோடு பணமும் பரிசாக வழங்கப்படும். அந்த வகையில் கடந்த அதிமுக ஆட்சியின் போது கொரோனா பாதிப்பின் காரணமாக 2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இதனையடுத்து அடுத்தடுத்து வந்த பொங்கல் தினத்தில் பொதுமக்கள் பொங்கல் பரிசை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர். இதனால் ஆரம்பத்தில் பொங்கல் பொருட்களை வழங்கிய திமுக அரசு அடுத்ததாக ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தொகையை அறிவித்தது.
பொங்கல் வேட்டி சேலை
இந்தநிலையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி சுமார் 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் சேலைகளும், அதே போல ஏறத்தாழ 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் வேட்டிகளும் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இலவச வேட்டி சேலைகள் உற்பத்திக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.100 கோடி வழங்கி அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார்.
பணமா.? பொருளா.?
எனவே பொங்கல் பண்டிகை முன்னதாக இலவச வேட்டி சேலை தயார் செய்யம் பணியானது தொடங்கியுள்ளது. இந்தநிலையில் இந்தாண்டும் பொங்கல் பரிசு தொகை வழங்கப்படும் என தெரிகிறது. எனவே கடந்த ஆண்டை போல் இல்லாமல் கூடுதலாக பணப்பரிசு வழங்கப்படுமா என பொதுமக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துள்ளனர். அந்த வகையில் அரசியல் கட்சியினரும் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகையாக 5ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
5ஆயிரம் ரூபாய் வழங்கிடுக
காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பாக புதிய உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான வி.சோமசுந்தரம், பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2500 ரூபாயை அப்போது தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்த தொகை போதாது 5000 வழங்க வேண்டும் என எதிர்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் தெரிவித்தார்.
அரசு அதிகாரிகள் கூறுவது என்ன.?
இன்றைக்கு தமிழக முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலின் பொங்கல் பண்டிகைக்கு ஏன் ஆயிரம் ரூபாயை மட்டும் வழங்குகிறார் 5ஆயிரம் ரூபாயை வழங்கி வேண்டியது தானே? என கேள்வி எழுப்பியவர் இந்தாண்டாவது வழங்குவார என கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே இந்தாண்டு பொங்கல் பரிசு தொகை அதிகரிக்கப்படுமா என்ற கேள்விக்கு அரசு அதிகாரிகள் கூறுகையில், தமிழக அரசு சார்பாக மாதம், மாதம் ஆயிரம் ரூபாயானது மகளிர் உதவி தொகை, தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் மூலம் வழங்கப்படுகிறது.
ஜனவரி மாதம் முடிவு
இந்த திட்டங்களை செயல்படுத்தவே உரிய நிதியில்லை. மத்திய அரசும் தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை இதுவரை உரிய முறையில் வழங்கவில்லை. இப்படி உள்ள சூழ்நிலையில் 5ஆயிரம் ரூபாய் கொடுப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று என தெரிவித்தனர். எனவே வழக்கம் போல் ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படும் எனவும் அதுவும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தான் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தனர்.