மனநலம் பாதித்த பெண் அரசு மருத்துவமனை கழிப்பறையில் வைத்து கற்பழிப்பு.. சிக்கிய ஆம்புலன்ஸ் உதவியாளருக்கு ஆப்பு.!
ராமநாதபுரத்தில் மனநலம் பாதித்த பெண்ணை கழிப்பறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான 108 ஆம்புலன்ஸ் உதவியாளர் பாலமுருகன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும், அவரது தாயும் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது அங்கு பணியில் இருந்த செவிலியர் வேறு ஒரு நோயாளியை கவனிக்க சென்றதால் காத்திருக்குமாறு கூறியுள்ளார். அந்த நேரத்தில் எனக்கு தெரிந்த மருத்துவரிடம் அழைத்து செல்வதாக கூறிவிட்டு இளம்பெண்ணின் தாயை அங்கயே இருக்க சொல்லிவிட்டு அந்த பெண்ணை மட்டும் தனியாக அழைத்து சென்றுள்ளார். பின்னர் மருத்துவமனையில் உள்ள கழிவறைக்கு அழைத்து சென்று இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது தாயிடம் நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து மருத்துவமனை தரப்பில் இருந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பாலமுருகன் கைது செய்யப்பட்டார். இதனிடையே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் 108 ஆம்புலன்ஸ்' உதவியாளர் பாலமுருகன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.