மும்பையைச் சேர்ந்த 22 வயது டி.வி. நடிகை ஒருவர் தன்னை ஒரு நபர் ராஜஸ்தானின் நீம்ரானாவில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக புகார் அளித்துள்ளார். 

மும்பை ஓஷிவாரா காவல் நிலையத்தில் நடிகை புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார், வழக்கு ஆவணங்களை நீம்ரானா போலீசாருக்கு அனுப்பினர். இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகும்படி நீம்ரானா போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நடிகை, குற்றம் சாட்டப்பட்டவர் இருவருமே ஆஜராகவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் போலீசாரின் விசாரணையில் பல்வேறு விவரங்கள் தெரியவந்துள்ளன. நடிகையுடன் கான்பூரைச் சேர்ந்த ஒருவர் சமூக வலைதளம் மூலம் அறிமுகமானதும், பின்னர் தொடர்பு எண்ணை பகிர்ந்து கொண்ட இருவரும் தினமும் வீடியோகால் மூலம் பலமணிநேரம் பேசி வந்ததும் தெரிய வந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் திருமணம் குறித்து பேசுவதற்காக நடிகையை தனியாக சந்திக்க வேண்டும் என அந்த நபர் அழைத்ததையடுத்து இருவரும் சுற்றுலா மேற்கொள்ள திட்டமிட்டனர். அவர்கள் லக்னோ சாஜாபூர், டெல்லி, நீம்ரானா உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா சென்றனர். அவர்களுடன் நடிகையின் தங்கையும் சென்றார். சுற்றுலாவின் போது பல்வேறு இடங்களில் இருவரும் பாலியல் உறவு கொண்டதும் தெரிய வந்துள்ளது. அந்த நபர் கான்பூருக்கு அழைத்துச் சென்று நடிகைக்கு தன் பெற்றோரை அறிமுகப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. 

ஆனால் மும்பை திரும்பிய பின் நடிகை அந்த நபருக்கு மும்பைக்கு அழைப்பு விடுத்தபோது அவர் வர மறுத்ததாகவும் திருமணம் செய்துகொள்ளவும் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது நடிகை அளித்த புகாரின் பேரில் மும்பை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.