எல்லாரும் என்ன மன்னிச்சுருங்க... நான் தப்பா பேசிட்டேன்... பிக்பாஸ் ஐஷு எழுதிய உருக்கமான கடிதம்
தவறான செயல்களில் இருந்து என்னைக் காப்பாற்ற முயன்ற யுகேந்திரன் சார், விச்சு மா, பிரதீப், அர்ச்சனா மற்றும் மணி அண்ணா ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று ஐஷு கடிதத்தில் கூறியுள்ளார்.
பிக்பாஸ் 7 தமிழ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் ஐஷு உருக்கமான கடிதம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், யுகேந்திரன், விசித்திரா, பிரதீப், அர்ச்சனா, மணி ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். நிகழ்ச்சியில் தான் பேசிய தவறான வார்த்தைகளுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தனது கடிதத்தில் ஐஷு கூறியிருப்பதாவது:
பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் அனைத்து பார்வையாளர்களுக்கும்,
இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் அனைத்து பார்வையாளர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன். என்னை நம்பிய அனைவருக்கும் நான் பெரும் ஏமாற்றத்தை அளித்துவிட்டேன். நிகழ்ச்சி எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பைத் தந்தது. என்னைப் போன்ற ஆயிரம் பெண்கள் இந்த வாய்ப்புக்காகக் காத்திருப்பார்கள். நான் என் குடும்பத்திற்கும், பெண்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்திவிட்டேன். நிகழ்ச்சியில் என்னைப் பார்த்ததும் என் மீதே எனக்குள்ள மரியாதையை இழந்துவிட்டேன்.
ஒருவரை விரும்புவதும் விரும்பப்படுவதும் மிகவும் வெறுக்கப்படும் என்று ஒருபோதும் எனக்குத் தெரியவில்லை. என்னைத் தவறான செயல்களில் இருந்து காப்பாற்ற முயன்ற யுகேந்திரன் சார், விச்சு மா, பிரதீப், அர்ச்சனா மற்றும் மணி அண்ணா ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பிக்பாஸ் மேடை ஒரு வாழ்க்கையை மாற்றும். ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் தளம். ஆனால் நான் இதுவரை சந்தித்த மிக விஷமத்தனம் கொண்ட சூழலில் இதுவும் இன்று. அங்கு, உங்கள் சக போட்டியாளர்களை நீங்கள் எவ்வளவு நேசித்தாலும், மதித்தாலும் அவர்களைப்பற்றி எப்போதும் எதிர்மறையான விஷயங்களையே சொல்ல வைக்கிறார்கள். இதனால் நீங்கள் பொய் பேசும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.
நான் இந்த நிகழ்ச்சிக்குத் தகுதியானவள் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். கோபம், காதல், பொறாமை, நட்பு ஆகியவை என்னை முழுவதுமாக கண்மூடித்தனமாக்கிவிட்டன. இதுவே எனக்குக் கிடைத்த முதல் பெரிய மேடை. அதை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்று நான் தெரிந்துகொள்ளவில்லை.
இதில் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்... என் குடும்பத்தை தனியாக விட்டுவிடுங்கள். சமூக ஊடகங்களில் என்னைப் பற்றிய கருத்துகளையும் வீடியோக்களையும் பார்க்கிறேன். கற்களை என்மீது எறியுங்கள், ஆனால் தயவுசெய்து என் குடும்பத்தை விட்டுவிடுங்கள். இன்றுவரை என்னை வளர்க்க அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். நான்தான் தவறு செய்துவிட்டேன். சில பழக்கங்கள் என்னை தவறான திசையில் திருப்பிவிட்டன.
இந்த நிகழ்ச்சி என்னை தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குக்கூடத் தள்ளியது. ஆனால் என் பெற்றோர்கள் என்மீது வைத்திருக்கும் கடைசி நம்பிக்கை மட்டுமே என்னை இதுவரை உயிருடன் வைத்திருக்கிறது. வனிதா மேம், சுரேஷ் தாத்தா.... என்னை மன்னிச்சுருங்க... உங்கள் மேல் நான் ரொம்ப மரியாதை வைத்திருக்கிறேன். வனிதா மேம், நான் உங்கள் மகளை விட ஒரு வயதுதான் மூத்தவள். ஒருவேளை நான் அவளைப்போல் முதிர்ச்சியுடனும் வலிமையுடனும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு நாள், நானும் அப்படி இருப்பேன்.
நிகழ்ச்சியில் ஆபாசமான மற்றும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக நான் மனதார வருந்துகிறேன். நான் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறி, என்னைப்பற்றி ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். நிகழ்ச்சியில் எனது செயல்கள் இழிவாகவும், அவமரியாதையாகவும், முதிர்ச்சியற்றதாகவும் இருந்ததால், என்னை நானே வெறுக்கிறேன். என்னை நம்பி, வீட்டில் என்னைப் பார்க்கக் காத்திருந்தவர்களுக்கு நான் மிகவும் அவமானத்தைக் கொடுத்துவிட்டேன். சில நட்புகள், நிறைய தவறான தொடர்புகள் மற்றும் தவறான முடிவுகள் என்னைக் குருடாக்கிவிட்டன. நான் எது சரி எது தவறு என்று தெரிந்தும், உண்மையைக் கவனிக்கத் தவறிவிட்டேன்.