17வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்தது. மக்களவை தேர்தலுடன் தமிழ்நாட்டில் சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் ஆகியவையும் நடத்தப்பட்டன. 

இன்று காலை 8 மணிக்கு தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடந்துவருகிறது. மக்களவை தேர்தல் முடிவுடன் சட்டமன்ற தேர்தல் வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. ஆந்திராவில் சட்டமன்ற வாக்கு எண்ணிக்கையும் நடந்துவருகிறது. 

கடந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் பாஜக கூட்டணியிலிருந்து விலகியது. பாஜகவிற்கு எதிராக தீவிரமாக களமிறங்கிய சந்திரபாபு நாயுடு, பாஜகவை வீழ்த்தும் முயற்சிகளில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஈடுபட்டார். 

ஆனால் ஆந்திராவில் ஆளுங்கட்சியாக இருக்கும் தெலுங்கு தேசம் கட்சிக்கு மக்களவை தேர்தலில் மட்டுமல்லாமல் சட்டமன்ற தேர்தலிலும் கடும் அடி விழுந்துள்ளது. ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் 131 தொகுதிகளில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. வெறும் 22 தொகுதிகளில் மட்டும் தான் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகிக்கிறது. இதனால் கண்டிப்பாக ஆந்திராவில் ஆட்சியை இழக்கும் நிலைக்கு தெலுங்கு தேசம் கட்சி வந்துள்ளது. 

25 மக்களவை தொகுதிகளில் 16ல் ஒய்.எஸ்.ஆர் கட்சியும் 4ல் மட்டுமே தெலுங்கு தேசம் கட்சியும் முன்னிலை வகிக்கிறது. 

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து பெறும் விவகாரத்தில் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி, பாஜகவிற்கு ஓவரா சவுண்டு கொடுத்த சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் ஆட்சியை இழப்பதோடு மக்களவை தேர்தலிலும் மண்ணை கவ்வியது.