கள்ளக்குறிச்சியில் ஜெயிக்கப்போவது யாரு? அலசி ஆராய்ந்ததில் கிடைத்த அசத்தல் ரிப்போர்ட்
பொன்முடியின் பணபலம், திண்ணைப் பிரசாரம், எதிரணியில் குட்டையைக் குழப்பும் வேளையில் இறங்கியிருப்பது என கள்ளக்குறிச்சியில் தற்போதைய நிலவரப்படி முதல்கட்டப் பணிகளில் திமுகவே ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது என தெளிவாக தெரிகிறது.
புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில், கள்ளக்குறிச்சி , ரிஷிவந்தியம், சங்கராபுரம், கெங்கவள்ளி, ஆத்தூர், ஏற்காடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதே கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி. இது விழுப்புரம், புதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, சேலம் என 3 மாவட்டங்களில் பரவியிருக்கிறது.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணியும், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மச்சான் சுதீஷும் மோதுகிறார்கள். 6 சட்டமன்றத் தொகுதியில் கள்ளக்குறிச்சி, கெங்கவள்ளி, ஆத்தூர், ஏற்காடு ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளும் தனித் தொகுதிகள். ஏற்காடு தொகுதியில் மலைவாழ் மக்கள் கணிசமாக இருக்கிறார்கள். ஆத்தூர், கெங்கவள்ளி இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் கொங்கு வேளாளர் கவுண்டர், வன்னியர், தலித் சமூகத்தினர் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்.
ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி தொகுதிகளில் வன்னியர், தலித், சமுதாயத்தினர் இருந்தாலும் உடையார், முதலியார், செட்டியார், தெலுங்கு நாயக்கர், கிறிஸ்துவர் மற்றும் இஸ்லாமியர்கள் கூடுதலாக இருக்கிறார்கள். இந்த சமுதாய பலத்தை வைத்தே வேட்பாளர்கள் சட்டமன்ற தொகுதிக்கேற்ப அந்தந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களையே களத்தில் இறக்கிவிட்டுள்ளார்களாம்.
திமுக கூட்டணியில் ஐஜேகே சேர்ந்ததே கள்ளக்குறிச்சியை வாங்கிவிட வேண்டுமென முடிவாகியிருந்த நிலையில் பொன்முடி தன் மகன் கௌதம சிகாமணிக்காக எப்படியோ பேசி அந்த தொகுதியை வாங்கிவிட்டார். சீட் வாங்கிய அடுத்த நிமிடமே, பொன்முடி ஒன்றியச் செயலாளர்களைக் கூட்டிக்கொண்டு ஒவ்வொரு கிளைச் செயலாளராகச் சந்தித்து வருகிறார். அதேபோல வேட்பாளர் கௌதம் சிகாமணியின் நண்பர்கள், உறவினர்கள் ஊர் ஊராக திண்ணை பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.
சேலம் மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகள் கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் இருக்கிறது. அந்த மூன்று தொகுதிகளும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் அதிமுக எம்,எல்.ஏ வாக இருப்பதால் தேமுதிகவுக்கு அவர்கள் நேரடியாக களத்தில் இறங்கவில்லை. அந்த மூன்று தொகுதிகளிலும் உதயசூரியனுக்கு அதிகமான வாக்குகள் பெற்று தருவதாக பொன்முடியிடம் சொன்னாராம், எடுத்துள்ளாராம் முன்னாள் அமைச்சரின் மகன் வீரபாண்டி ராஜா.
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும்போது கூட, திமுக வேட்பாளர் தந்தை பொன்முடி சொந்த கட்சியினரை நம்ப மாட்டார், எதிர்க்கட்சியை நம்பிதான் இருக்கிறார், நீங்கள் அவர்கள் கொடுக்கும் பணத்துக்கு விலை போய்விடாதீர்கள் என பேசியது சுதீஷ் செம்ம ஷாக் ஆகியதாக சொல்கிறார்கள் நிர்வாகிகள். தேமுதிக வேட்பாளர் சுதீஷ் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளிடம் நெருங்கி பேசவில்லை என்ற வருத்தம் அதிமுகவினரிடம் உள்ளது. அதுமட்டுமல்ல இதுவரை சல்லி காசு கூட தரவில்லையாம். பூத் செலவுக்குப் பணம் கேட்டால் கூட உங்கள் கட்சி மாவட்டச் செயலாளர் அமைச்சர் சீவி சண்முகம் பார்த்துக்குவாங்க என சொல்வது அதிமுக நிர்வாகிகள் டல்லாக இருப்பதாக சொல்கிறார்கள்.
ஆனாலும், தொகுதிக்குள்ள கட்சியோட கெத்த விட்டுக்கொடுக்கக் கூடாது என அதிமுக விசுவாசிகள் ஓடி ஓடி வேலை பார்க்கிறார்களாம், அதிமுகவினர் ஒத்துழைக்கும் அளவுக்கு பாமகவினர் ஒத்துழைக்காமல் ஒதுங்கி நிற்கிறார்கள் என்ற அதிருப்தியை அன்புமணியிடம் சொல்லி வருத்தப்பட்டாராம் சுதீஷ்.
தேர்தல் பிரச்சார வேலைகளில் தீவிரம் காட்டாமல் அதிருப்தியில் இருக்கிறாராம் சுதீஷ். வெளியூர்களில் இருந்துவரும் தேமுதிக நிர்வாகிகள் மட்டுமே, விஜயகாந்த்தின் மீது உள்ள விசுவாசத்திற்காக நாங்களும் பிரச்சாரத்திற்கு வந்தோம் என ஊர் ஊராக முரசு சின்னத்துக்கு வாக்குகளைக் கேட்டுப் போட்டோ எடுத்து வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் பதிவுசெய்து விட்டு ஜூட் விடுகிறார்களாம்.
தினகரனின் அமமுக பொறுத்தவரை வேட்பாளர், தொண்டர்கள் என யாருமே இல்லை பரிசுப்பெட்டி சின்னத்தோடு பிரச்சார வாகனங்கள் மட்டுமே தொகுதி முழுவதும் வலம் வருகிறது. இப்படி பொன்முடியின் பணபலம், திண்ணைப் பிரசாரம், எதிரணியில் குட்டையைக் குழப்பும் வேளையில் இறங்கியிருப்பது என கள்ளக்குறிச்சியில் தற்போதைய நிலவரப்படி முதல்கட்டப் பணிகளில் திமுகவே ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது என தெளிவாக தெரிகிறது.