நாளை பிரசாரத்திற்கு வருகிறார் விஜயகாந்த்! கம்பீரக்குரலை கேட்க ஆவலாக இருக்கும் தொண்டர்கள்...
பிரசாரத்திற்கு வருவேன் என்று விஜயகாந்த் பேசியிருந்த நிலையில் அவர் நாளை சென்னையில் பிரசாரம் மேற்கொள்கிறார் என தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் இறங்கியுள்ளன. தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என அக்கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. இதற்கிடையே தேமுதிக வெளியிட்ட வீடியோவில், பிரசாரத்திற்கு வருவேன் என்று விஜயகாந்த் பேசியிருந்த நிலையில் அவர் நாளை சென்னையில் பிரசாரம் மேற்கொள்கிறார் என தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், டாக்டர்களின் அறிவுரைப்படி, பிரசாரத்திற்கு செல்லாமல் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். டாக்டர்கள் விஜயகாந்திற்கு பேச்சு பயிற்சியும் அளித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் கூட்டணிக்கு காட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்துவந்த பிரேமலதா, விரைவில் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்வார் என கூறியிருந்தார்.
இந்நிலையில், விஜயகாந்த் நாளை மாலை 4 மணிக்கு பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தேமுதிக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பால், தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன், வட சென்னை தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ் ஆகியோரை ஆதரித்து விஜயகாந்த் பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாளை வடசென்னை தேமுதிக வேட்பாளர் திரு அழகாபுரம் மோகன்ராஜ் அவர்களுக்கு முரசு, மத்திய சென்னை பாமக வேட்பாளர் திரு சாம்பால் அவர்களுக்கு மாம்பழம் & தென் சென்னை அதிமுக வேட்பாளர் Dr ஜெயவர்தன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னங்களை ஆதரித்து தேர்தல் பிரச்சார பயணம் மேற்கொள்ள உள்ளேன் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் சிகிச்சைக்குப்பின் மீண்டும் தோன்றல்களை சந்திக்க உள்ளதால், தேமுதிக தொண்டர்கள் மட்டுமல்ல, மற்ற அரசியல் கட்சியை சேர்ந்த தொண்டர்களும் விஜயகாந்தின் கம்பீரக் குரலைக் கேட்க ஆவலாக உள்ளனர்.