வெற்றிச் சின்னத்தில் நிற்பவர் எம்.பி.யாக வேண்டுமா? அல்லது சொந்த சின்னத்தையே அடகு வைத்த சந்தர்ப்பவாதி வேணுமா?: பற்றி எரியும் வெங்குவின் பிரசாரம்.
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார் வெங்கு மணிமாறன். தேசிய அரசியலுக்கு புதிதான இவர், களத்துக்கு வந்த புதிதில் சாஃப்ட்வேராக தான் இருந்தார். ஆனால் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக மக்கள் தந்திருக்கும் செல்வாக்கு, எழுச்சி ஆகியவற்றைப் பார்த்து பிரசாரத்தில் எதிர்முகாம் வேட்பாளரை வெளுத்துக் கட்டுகிறார் வெங்கு.
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார் வெங்கு மணிமாறன். தேசிய அரசியலுக்கு புதிதான இவர், களத்துக்கு வந்த புதிதில் சாஃப்ட்வேராக தான் இருந்தார். ஆனால் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக மக்கள் தந்திருக்கும் செல்வாக்கு, எழுச்சி ஆகியவற்றைப் பார்த்து பிரசாரத்தில் எதிர்முகாம் வேட்பாளரை வெளுத்துக் கட்டுகிறார் வெங்கு.
வெங்கு மணிமாறன் அளும் அணியின் வேட்பாளர் என்பதைவிட அ.தி.மு.க.வின் தீவிர விசுவாசி! என்பதுதான் முதலில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். சமீபத்தில் பிரசாரத்தில் மைக் பிடித்த வெங்கு...”நான் தேசிய அரசியலுக்கு புதுசுதானுங்க. ஆனால் அரசியல், பதவி பரிமாணங்களில் நான் அனுபவசாலிதான்.
நான் கேக்குறேனுங்க, யார் நல்ல மக்கள் பிரதிநிதியா இருந்திட முடியும்? ஒரு கட்சியின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு, அதில் இணைஞ்சு, பல காலமா அதன் வெற்றிக்கு உழைச்சு, படிப்படியா முன்னேறி வந்து அதிகாரத்தை பெறுபவன் தான் உண்மையான அரசியல்வாதி. இந்த கழகத்தின் மேலே நான் வெச்சிருக்கிற மதிப்புக்கும், மரியாதைக்கும், எல்லாத்தையும் தாண்டி நான் என் உயிருக்கும் மேலாக வைத்துள்ள விசுவாசத்துக்கும் கிடைச்ச வெகுமதிதானுங்க, அங்கீகாரம்தானுங்க இந்த சீட்.
ஆனால் எதிரணியில் நிற்கும் திரு.கணேசமூர்த்திக்கு என்ன சித்தாந்தம் இருக்குது? தி.மு.க.வில் வாரிசு சண்டையால் வெளியேற்றப்பட்ட வைகோவுடன் சேர்ந்து ம.தி.மு.க.வில் கோலோச்சுறார். எம்.பி. தேர்தலில் துவங்கி சாதாரண வார்டு தேர்தல் வரைக்கும் மாற்றி மாற்றி கூட்டணி வைக்கிற வைகோ, எப்படியாச்சும் இந்த கணேசமூர்த்திக்கு ஒரு சீட்டை வாங்கி கொடுத்துடுறார்.
இந்த தேர்தலில் தி.மு.க.வை. வசைமாரி பொழியுறவங்க, அடுத்த தேர்தல்ல அதே அணியில் போய் கலந்துகிட்டு, வெட்கமேயில்லாம ஸ்டாலினை புகழ்றாங்க. இந்த தாவல் குணத்துக்கான வெகுமதிதான் சீட்.
அதிலேயும் இந்த தடவை கணேசமூத்தி, ம.தி.மு.க.வின் சின்னமா ஒரு காலத்துல இருந்த பம்பரம் பறிபோனதாலே, உதயசூரியன் சின்னத்தில் போட்டி போடுகிறார். இதற்காக ம.தி.மு.க.வில் தான் பல காலமாக, இளைஞர் ஒருவருக்கும் வாய்ப்பு தராம வகிச்சுட்டு இருக்கிற பொருளாளர் பதவி உள்ளிட்டவைகளை ராஜினாமா பண்ணிட்டு, தி.மு.க.வின் அடிமட்ட உறுப்பினராகி, அந்த அடிப்படையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி போடுறார்.
இதைவிட வேறென்ன கேவலம் வேண்டும்!?
இப்ப சொல்லுங்க மக்களே வெற்றிச்சின்னமாம் ரெட்டை இலையில் நிற்கிற நான் உங்களுக்கு எம்.பி.யாகி தொண்டு செய்யணுமா? இல்லே பதவிக்காக சொந்த சின்னத்தையே அடகு வைத்தவர் வேணுமா?” என்று ஜெயலலிதா ஸ்டைலில் கேட்கிறார்.