தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசிய  கி.வீரமணி; தி.மு.க கூட்டணி கொள்கைக் கூட்டணி. மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி. எதிர் அணியில் இருக்கும் அதிமுக கூட்டணி மாட்டுச்சந்தை கூட்டணி. இவர்கள் பேரம் பேசிவந்த கூட்டணி. திமுக வின் தேர்தல் அறிக்கை இந்தியாவிற்கே முதன்மையாக அமையும் வகையில், ஸ்டாலின் வடிவமைத்துள்ளார். 

நீட் தேர்வு ரத்து. நீட் தேர்வால் மருத்துவபடிப்பைப் படிக்க முடியாமல் அறியலூர் அனிதா தற்கொலை செய்துகொண்டார். மற்ற மாநிலங்களைவிட அதிக அளவில் தமிழகத்தில்தான் அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள், அதிக அளவில் மருத்துவம் படிக்கத்தான், கருணாநிதி அதிக அளவிலான மருத்துவக்கல்லூரிகளை உருவாக்கினார். 

ஆனால், ஏழை மாணவர்கள் பாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. அதிமுக  கூட்டணி, நீட் தேர்வு ரத்து என்று சொல்ல முடியுமா... அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறதா? ஏனெனில், அவர்கள் மத்திய அரசிடம் அடிமையாக இருக்கிறார்கள். தமிழக முதல்வர் பழனிசாமி பேசும்போது, கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில்தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது என்கிறார். நுழைவுத் தேர்வு என்றால் என்ன என்றே அவருக்குத் தெரியாது. கருணாநிதி எதைக் கொண்டுவந்தார். ஜெயலலிதா எதைக் கொண்டு வந்தார் என்று எதையும் தெரியாமல் ஆட்சிசெய்யும் ஒரே முதல்வர் இவர்தான்.

நான் விவசாயி என்று முதல்வர் பேசுகிறார். அவர்தான் விவசாயிகளின் நிலத்தைப் பிடிங்கி, அவர்கள் கண்ணீர் விட்டும் கவலைப்படாமல் 8 வழிச்சாலை கொண்டுவந்தார்.  கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம்கூட தெரிவிக்காதவர்தான் மோடி. அவர் இன்று தேர்தலுக்காக தமிழகத்தை நாடி வருகிறார். முதல் தலைமுறை இளைஞர்கள் மோடியின் வித்தையில் மயங்கிவிடக் கூடாது. 

 மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்படும்.  மோடியையும் பழனிசாமியையும் வீட்டுக்கு அனுப்ப நேரம் வந்துவிட்டது. தோல்வி பயத்தால் அவர்கள் எதையும் செய்வார்கள். மக்கள் நோட்டுக்கும் நோட்டாவுக்கும் அடிபணியாமல், அதையும் தாண்டி உதயசூரியனை வெற்றிபெறச் செய்ய வேண்டும். உதயசூரியன் வானத்தில் எரிந்தால்தான். உங்கள் வீடுகளில் விளக்கு எரியும் எனக் கூறினார்.