தலைநகரான டெல்லியில் மொத்தம் 7 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இங்கு ஆளும் கட்சியாக அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி உள்ளது.

 

டெல்லியில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது. தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், டெல்லியில் 7 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகிக்கிறது. ஆம் ஆத்மி 2ம் இடத்திலும், காங்கிரஸ் 3ம் இடத்திலும் உள்ளன. இது ஆம் ஆத்மிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. 

டெல்லி முன்னாள் முதல்வரான காங்கிரஸைச் சேர்ந்த ஷீலா தீட்சித் கூட 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். வடகிழக்கு டெல்லியில் போட்டியிட்ட ஷீலா தீட்சித், பாஜக வேட்பாளர் மனோஜ் திவாரியை விடவும் சுமார் 30 ஆயிரம் வாக்குகள் பின்தங்கி இருக்கிறார். கிழக்கு டில்லியில் பாஜக சார்பில் போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் காம்பீர் முன்னிலை வகிக்கிறார். இவர் ஆம் ஆத்மி கட்சியால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆம் ஆத்மியும் காங்கிரசும் கூட்டணி அமைக்க முயற்சிகள் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை ஆம் ஆத்மி மேற்கொண்டது. ஆனால் இதை நிராகரித்த ராகுல், காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவு செய்து வேட்பாளர்களை அறிவித்தார். இதுவே பாஜகவுக்கு அனுகூலமாக அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஊழலுக்கு எதிரான அரசியல் இயக்கமாகக் கிளர்ந்தெழுந்த ஆம் ஆத்மி அதன் கோட்டையான டெல்லியிலேயே தலைகவிழ்ந்துள்ளது.